மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம் அளித்தது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணையின்போது உயிரிழந்தார். அஜித் குமாரை கம்பால் தாக்கி கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அஜித்குமார் மரணம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கறிஞர் மாரீஸ்குமார் உட்பட பலர் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அஜித்குமார் காவல் மரணம் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் விசாரணை அறிக்கை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர்கள் தரப்பில், அஜித்குமார் காவல் மரணம் மற்றும் அவர் மீதான திருட்டு வழக்கு விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் காலக்கெடு விதித்திருந்தது. இருப்பினும் அந்த காலக்கெடுவுக்குள் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறப்பட்டது.
சிபிஐ தரப்பில், தடயவியல் ஆய்வு தொடர்பாக ஹைதராபாத் மத்திய தடயவியல் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வந்துள்ளது. டெல்லியில் இருந்து தடயவியல் பரிசோதனை முடிவுகள் வரவில்லை. அந்த முடிவு வந்த பிறகே அஜித்குமார் காவல் மரண வழக்கில் யார், யார் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவரும். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். அதற்கு அவகாசம் வேண்டும் எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ஏற்கெனவே 6 வாரம் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அவகாசம் கேட்பது ஏற்புடையது அல்ல. இந்த வழக்கில் டெல்லி தடயவியல் ஆய்வகத்தை நீதிமன்றம் தானாக முன்வந்து எதிர் மனுதாரராகச் சேர்க்கிறது. டெல்லி ஆய்வகம் அஜித்குமார் மரணம் தொடர்பான ஆய்வக முடிவுகளை 3 வாரத்தில் சிபிஐக்கு வழங்க வேண்டும். விசாரணை நவ.27-க்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.