சென்னை: இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியை ராகுல் காந்தி தொடர்ந்து செய்து வருகிறார் என்றும் அவரது இந்த முயற்சிகள் அனைத்தும் மக்களால் முறியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றும் பாஜக தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த வருடம் நடைபெற்ற ஹரியானா தேர்தல்கள் குறித்து ராகுல் காந்தியின் கருத்துக்கள் வெறும் புலம்பலேயன்றி வேறில்லை. தொடர் தோல்விகள் ராகுல் காந்தியை விரக்தியின் எல்லைக்கே இட்டுச் சென்று விட்டது என்பதை தான் அவரின் ஆதாரமற்ற, பொறுப்பற்ற, உள்நோக்கம் கொண்ட பேச்சு உணர்த்துகிறது.
பல்வேறு பொருந்தா குற்றச்சாட்டுகளை இப்போது முன் வைத்திருக்கிறார் ராகுல். ஆனால், ஹரியானாவில் தேர்தல் ஆணையம் முறையாக அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி, ஜனநாயக ரீதியாக தேர்தல்களை நடத்தியுள்ளது.
1. கடந்த 05/10/2024 அன்று ஹரியானாவில் தேர்தல் நடைபெற்றது.
2. 02/08/2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
3. 4,16,408 கோரிக்கைகள் மற்றும் எதிர்ப்புகள் தேர்தல் ஆணையத்திற்கு வைக்கப்பட்டன.
4. அனைத்தையும் பரிசீலித்து இறுதி வாக்காளர் பட்டியல் 27/08/2024 அன்று வெளியிடப்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.
5. இதற்கு பின்னர் எந்த விதமான மேல்முறையீடும் தேர்தல் ஆணையத்திடம் கோரப்படவில்லை.
6. 16/09/2024 அன்று அனைத்து வேட்பாளர்களுக்கும் இறுதி பட்டியல் வழங்கப்பட்டது.
7. மாநிலம் முழுக்க 86,790 வாக்குச்சாவடி முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்டார்கள்.
8. தேர்தலுக்கு பின் எந்த வேட்பாளரும் எவ்விதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.
9. மாநிலம் முழுவதிலும் 10,180 வாக்கு எண்ணிக்கை முகவர்கள் வேட்பாளர்களால் நியமிக்கப்பட்டார்கள்.
10. 08/10/2024 அன்று முடிவுகள் வெளியிடப்பட்டன.
11. குறிப்பிட்ட கால வரைக்குள் தேர்தல் முடிவுகளை எதிர்த்து 23 வழக்குகள் பதிவாகியுள்ளன.
ஆனால், திடீரென்று தேர்தல் நடைபெற்ற ஒரு வருடம் கழித்து ராகுல் காந்தி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவது அவரின் அறியாமையை, முதிர்ச்சியின்மையை மட்டுமல்ல, இதை நாட்டின் ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கும் செயலாகவே பார்க்க முடிகிறது.
தானும், தன் கட்சியும் வெற்றி பெற முடியவில்லையே என்கிற ஆதங்கத்தில், விரக்தியில் உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவை பலவீனமாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார் ராகுல் காந்தி. அரசியலமைப்பு சட்டத்திற்குட்பட்டு சட்ட ரீதியாக புகார் அளியுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் பலமுறை கூறியும், சமூக ஊடகங்களின் மூலமாகவும், ஊடகங்களின் மூலமாகவும் விளம்பரம் தேடிக் கொள்வதோடு, இந்தியாவை பலவீனமாக்கும் முயற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறார் ராகுல் காந்தி.
இந்த முயற்சிகள் அனைத்தும் மக்களால் முறியடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிஹார் தேர்தலிலும் ராகுல் காந்தியின் சதித்திட்டத்தை முறியடிப்பதோடு காங்கிரஸ் கட்சியை தவிடு பொடியாக்குவார்கள் மக்கள். ஜனநாயகம் வெல்லும். காலம் காங்கிரஸுக்கு பதில் சொல்லும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.