லக்னோ: உ.பி.யின் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சனூர் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடையில் நேற்று காலை 9.15 மணிக்கு சோபன் – பிரயாக்ராஜ் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது.
இதில் இருந்து இறங்கிய பயணிகள் சிலர், எதிரில் உள்ள 3-வது நடைமேடைக்கு செல்ல படிக்கட்டுகளை பயன்படுத்தாமல் தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றனர். அப்போது 3-வது லைனில் வேகமாக வந்த நேதாஜி எக்ஸ்பிரஸ் அவர்கள் மீது மோதியது. இதில் 6 பெண்கள் உயிரிழந்தனர்.
இவர்கள் கார்த்திகை பவுர்ணமியை முன்னிட்டு, கங்கையில் புனித நீராட வந்த பக்தர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். விபத்து குறித்து ரயில்வே துறை விசாரித்து வருகிறது.