நெல்லை: “தவெக தலைவர் விஜய் பலவீனமானவர். கரூர் விவகாரத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையாக நடந்து கொண்டார்” என்று தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கூறினார்.
திருநெல்வேலி உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றங்கரையில், சமூக நல்லிணக்க பேரவை, தமிழ்நாடு அய்க்கஃப், துறவியர் பேரவை மற்றும் தோழமை கல்வி நிறுவனங்கள் இணைந்து மாநில அளவிலான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி, மரக்கன்று மற்றும் பனை விதை நடும் விழாவை நடத்தின.
இதில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் கோ.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுடன் இணைந்து பனை விதைகளை தாமிரபரணி கரைகளில் நட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
தொடர்ந்து சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து தாமிரபரணி ஆற்றங்கரை பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகளை நடவு செய்தனர். மேலும் பசுமை, சுற்றுச்சூழல் ஆகியவை தொடர்பாக பறை அடித்து, பதாதகை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் சட்டப் பேரவை அப்பாவு தலைவர் கூறியது: “தவெக தலைவர் விஜய் பலவீனமானவர். ஒரு பிரச்சினை என்றவுடன் அவரும் அவருடன் உள்ளவர்களும் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஆனால், கரூர் விவகாரத்தில் தமிழக முதல்வர் பெருந்தன்மையாக நடந்து கொண்டார். அவரை சிறுமைப்படுத்த நினைப்பவர்கள் சிறுமைப்பட்டு போவார்கள்.
தமிழக முதல்வரிடம் குறுகிய எண்ணம் கிடையாது. தண்டிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்திருந்தால், விஜய்யை அன்றே கைது செய்து சிறையில் அடைத்திருப்பார். 41 பேர் உயிரிழந்தவுடன் துண்டை காணோம், துணியை காணோம் என்று ஓடி ஒளிந்தவர்கள், தற்போது நானும் ரவுடி தான் என நடிகர் வடிவேல் சொன்னது போல் சொல்லி வருகிறார்கள்.
பலவீனமானவர்கள் தன்னை வீரன் என காட்டிக் கொள்ள எதையாவது சொல்லிக் கொள்வார்கள். நடிகர்கள் கட்சி ஆரம்பித்து என்ன ஆனார்கள் என்ற வரலாறு உள்ளது. இப்போது கட்சி ஆரம்பித்த நடிகரும் அந்த வரலாற்றில் இடம் பெறுவார். வரும் சட்டப் பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்று ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார். சிறப்பு வாக்காளர் தீவிர திருத்த பணிகளில் யாருக்கும் பயமில்லை” என்று அவர் கூறினார்.