பாட்னா: பிஹார் சட்டமன்றத் தேர்தலில் எதிரெதிர் அணியில் போட்டியிடும் சகோதரர்கள் தேஜஸ்வி யாதவ் மற்றும் தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர்களின் தாயும், பிஹார் முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 243-ல் 121 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ராப்ரி தேவி, அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ் மற்றும் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஆகியோருடன் சேர்ந்து பாட்னாவில் வாக்களித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய ராப்ரி தேவி, “என் இரு மகன்களுக்கும் வாழ்த்துகள். தேஜ் பிரதாப் தனது சொந்தக் காலில் நின்று தேர்தலில் போட்டியிடுகிறார். நான் ஒரு தாய், என் இரு மகன்களுக்கும் எனது வாழ்த்துகள். பிஹார் மக்கள் அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களிக்க வேண்டும்” என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் போட்டி:
பிஹார் சட்டப்பேரவை தேர்தல் இந்த முறை ஒரு சுவாரஸ்யமான திருப்பத்தை சந்தித்துள்ளது. இத்தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் மற்றும் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் எதிரெதிர் அணிகளில் போட்டியிடுகின்றனர்.
தேஜஸ்வி யாதவ் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக இருந்து ரகோபூர் தொகுதியில் ஆர்ஜேடி சார்பில் போட்டியிடுகிறார். அவரது சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ் மஹுவாவில் ஜன்சக்தி ஜனதா தளக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
தேஜ் பிரதாப் தனது பேஸ்புக் கணக்கில் ஒரு சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டதை அடுத்து, மே 25 அன்று ஆர்ஜேடியில் இருந்து ஆறு ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டார். இந்த சூழலில் அவர் சமீபத்தில் ஜன்சக்தி ஜனதா தளம் கட்சியை தொடங்கி பிஹார் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 3.75 கோடி. மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.