புதுடெல்லி: பிஹார் சட்டப்பேரவைக்கு நவம்பர் 6, 11 தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இதன்படி, மொத்தம் உள்ள 243-ல் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி, காங்கிரஸின் ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர். தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினம் ஓய்ந்தது. 18 மாவட்டங்களை உள்ளடக்கிய இந்த தொகுதிகளில் மொத்தம் 122 பெண்கள் உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். வாக்காளர்கள் எண்ணிக்கை 3.75 கோடி. மொத்தம் 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடந்த 2020 தேர்தலில், 121 -ல் மெகா கூட்டணி 61, தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 59 மற்றும் லோக் ஜன சக்தி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்தது. எனவே, இந்த முதல்கட்ட தேர்தல் இரண்டு கூட்டணிகளுக்கும் மிக முக்கியமானதாக உள்ளது.
முதல் முறையாக போட்டியிடும் பிராசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கூட்டணிக்கும் இன்றைய வாக்குப்பதிவு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது. கடந்த முறை, இரண்டு கூட்டணிகளுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் சில ஆயிரம் மட்டுமே. இதனால் மெகா கூட்டணி ஆட்சி அமைய வெறும் 12 தொகுதிகள் குறைந்தன. சிராக் பாஸ்வானின் எல்ஜேபி தனித்து போட்டியிட்டிருந்தது. அக்கட்சியின் ஒரு எம்எல்ஏவும் பிறகு முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) இணைந்தார். அதேநேரம், இந்த முறை எல்ஜேபி என்டிஏவுடன் இணைந்ததால் இக்கூட்டணிக்கு பிரச்சினை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 121 தொகுதிகளில் மெகா கூட்டணியின் தலைமைக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) மட்டும் 42 தொகுதிகளில் வென்றிருந்தது. இக்கூட்டணியின் இதர உறுப்பினர்களான காங்கிரஸ் 8 மற்றும் இடதுசாரிகள் 11 தொகுதிகளைப் பெற்றன. அதேபோல், பாஜக 32 மற்றும் ஜேடியு 23 தொகுதிகளில் வெற்றி பெற்றன.