புதுடெல்லி: பிஹாரின் லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹாவின் கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
லக்கிசராய் தொகுதி பாஜக வேட்பாளரும் துணை முதல்வருமான விஜய் குமார் சின்ஹா, தனது தொகுதிக்கு உட்பட்ட கோரியாரி என்ற கிராமத்திற்குச் சென்றபோது அந்த கிராமத்தைச் சேர்ந்த ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்கள் அவரது கார் மீது செருப்பு, கற்களை வீசி தாக்கினர். மேலும், மாட்டு சாணத்தை வீசியதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய் குமார் சின்ஹா, “இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராஷ்ட்ரிய ஜனதா தள குண்டர்கள். அவர்கள் என்னை கிராமத்துக்குள் செல்ல விடவில்லை. அவர்கள் எனது வாக்குச்சாவடி முகவரை திருப்பி அனுப்பி உள்ளனர். கோரியாரி கிராமத்தின் பூத் எண்கள் 404 மற்றும் 405. நான் சென்றபோது எனக்கு எதிராக ஒழிக கோஷங்களை எழுப்பினர்” என தெரிவித்தார்.
பொதுவாக அமைதியாக நடந்த சட்டப்பேரவை முதற்கட்டத் தேர்தலில் இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிட்டது. இந்த சம்பவத்தை அடுத்து, வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநில காவல்துறை தலைவருக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். சட்டத்தை யாரும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ள ஞானேஷ்குமார், அனைத்து வாக்காளர்களும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் எவ்வித அச்சமும் இன்றி பாதுகாப்பாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.