கொல்கத்தா,
அண்மையில் முடிவடைந்த மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பரான ரிச்சா கோஷ், மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். இந்த தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இறுதிப்போட்டியிலும் 24 பந்துகளில் 34 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இந்த தொடரில் மொத்தம் 8 ஆட்டங்களில் விளையாடி 235 ரன்கள் எடுத்தார்.
இதன் காரணமாக அவருக்கு பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் கொல்கத்தா ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில் வருகிற 9-ந்தேதி பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்படுகிறது. விழாவில் அவருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட பேட் மற்றும் பந்து வழங்கப்படுகிறது. இந்த பேட் மற்றும் பந்தில் இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, பெண்கள் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி ஆகியோர் கையெழுத்திட்டு பரிசாக வழங்க உள்ளனர்.