அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தின் கவர்னர் (Governor), லெப்டினன்ட் கவர்னர் (Lieutenant Governor), அட்டர்னி ஜெனரல் (Attorney General) ஆகிய முக்கியப் பதவிகளுக்கான தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களும் தேர்தலை எதிர்கொண்டனர்.
இந்த தேர்தலின் முடிவில் வர்ஜீனியாவின் முக்கியமான மூன்று பதவிகளுக்கும் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களே அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கின்றனர்.

வர்ஜீனியாவின் முதல் பெண் கவர்னராக அபிகெயில் ஸ்பான்பெர்கர் (Abigail Spanberger) தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
அமெரிக்காவின் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் முஸ்லீம், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் முஸ்லீம் பெண் லெப்டினன்ட் கவர்னராக கஸாலா ஹாஷ்மி (Ghazala Hashmi) தேர்வாகியிருக்கிறார்.
வர்ஜீனியாவின் முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க அட்டர்னி ஜெனரலாக ஜே ஜோன்ஸ் (Jay Jones) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதேப் போல நியூயார்க் மேயர் தேர்தலிலும் ஜனநாயகக் கட்சியின் இந்திய – ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் சோஹ்ரான் மம்தானி (Zohran Mamdani), நியூ ஜெர்சியின் கவர்னர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த மிக்கி ஷெரில் (Mikie Sherrill) வெற்றி பெற்றுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக, 2025 அமெரிக்கத் தேர்தல்களில் ஜனநாயகக் கட்சி மூன்று மாநிலத் தலைவர்கள் (வர்ஜீனியா கவர்னர், நியூ ஜெர்சி கவர்னர்) மற்றும் ஒரு முக்கிய நகர மேயர் (நியூயார்க்) பதவிகளில் வெற்றி பெற்று வலுவான அரசியல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.