புதுடெல்லி,
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த ஜூன் 12-ந்தேதி லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கிய ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் ‘போயிங் 787-8 டிரீம்லைனர்’ விமானத்தில் மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த கோர விபத்தில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் காயங்களுடன் உயிர் பிழைத்தார்.
இந்த விபத்தை தொடர்ந்து டாடா குழுமத்திற்கு சொந்தமான ‘ஏர் இந்தியா’ நிறுவனத்தின் விமானங்கள் மீது அவசரகால உபகரணங்களை சரிபார்க்காமல் விமானங்களை இயக்குவதற்கான எச்சரிக்கைகள், இயந்திர பாகங்களை சரியான நேரத்தில் மாற்றாதது, போலி பதிவுகள், பணியாளர் மேலாண்மை குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த விபத்தில் உயிரிழந்த விமானி கேப்டன் சுமித் சபர்வாலின் தந்தை புஷ்கராஜ் சபர்வால்(வயது 91) மற்றும் இந்திய விமானிகள் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், விமான விபத்து குறித்து முன்னாள் நீதிபதி தலைமையில் நீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, புஷ்கராஜ் சபர்வால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமெரிக்க நாளிதழ் ஒன்றில் விமானி சுமித் சபர்வால் தொடர்பாக வெளியான செய்தியை சுட்டிக்காட்டினார். அப்போது நீதிபதிகள் விமானியின் தந்தையிடம், “அகமதாபாத் விபத்தில் விமானியை குறைசொல்ல முடியாது. நீங்கள் பழியை சுமக்க வேண்டியதில்லை. அது ஒரு விபத்து. முதற்கட்ட அறிக்கையில் கூட அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இல்லை” என்று தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்க பத்திரிகையில் வெளியானது, ‘இந்தியாவை குறை சொல்வதற்காகவே எழுத்தப்பட்ட மோசமான செய்தி’ என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதோடு, கடந்த ஜூலை 12-ந்தேதி விமான விபத்து புலனாய்வு வாரியம் (AAIB) வெளியிட்ட முதற்கட்ட அறிக்கையை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விபத்துக்கு விமானிதான் காரணம் என்று எங்கும் கூறப்படவில்லை என்றும், விமானத்தில் இருந்த இரண்டு விமானிகளுக்கு இடையேயான உரையாடலை மட்டுமே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தினர்.
விமான விபத்து புலனாய்வு வாரியம் விசாரணை மேற்கொள்வது குற்றம் சாட்டுவதற்காக அல்ல என்றும், எதிர்கால துயரங்களைத் தவிர்ப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை பரிந்துரைப்பதே விசாரணையின் நோக்கம் என்றும் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை 10-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.