PAN Card : பான் கார்டு (PAN) வைத்திருப்போர் உஷாராக இருக்க வேண்டும். ஏனென்றால், உங்கள் பான் எண்ணை கிரிமினல்கள் பயன்படுத்தினால் என்ன ஆகும்? மோசடியை உடனே பிடிப்பது எப்படி? என்பதை தெரிந்து வைத்திருப்பது உங்களுக்கு எப்போதும் உதவியாக இருக்கும்.
Add Zee News as a Preferred Source
பான் அட்டை மோசடி என்றால் என்ன?
நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number) எனப்படும் பான் கார்டு என்பது இந்தியாவில் அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியமான அரசு ஆவணம் ஆகும். வங்கிக் கணக்கு தொடங்குவது, சொத்துப் பதிவு செய்வது, வரி தாக்கல் செய்வது என எல்லாவற்றுக்கும் இது அவசியம். இந்த டிஜிட்டல் உலகில், மோசடி செய்பவர்கள் உங்கள் பான் எண்ணைத் திருடி, உங்கள் அடையாளத்தை திருடி (Identity Theft) தவறாகப் பயன்படுத்தலாம்.
மோசடிக்காரர்கள் உங்கள் பான் எண்ணை வைத்து:
* உங்களுக்குத் தெரியாமல் வங்கி கணக்குகளைத் தொடங்கலாம்.
* போலியான கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளை வாங்கலாம்.
* சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளைச் செய்யலாம்.
* போலியான வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யலாம்.
இவை அனைத்தும் உங்களுக்குப் பெரும் நிதி இழப்பையும் சட்டச் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.
உங்கள் பான் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் கண்டுபிடிப்பது எப்படி?
உங்கள் பான் எண்ணை யாராவது பயன்படுத்தியுள்ளார்களா என்று தெரிந்துகொள்ள, உங்கள் கிரெடிட் ஸ்கோரை (Credit Score) அடிக்கடி செக் செய்வதுதான் மிகவும் பாதுகாப்பான வழி. உங்கள் கிரெடிட் அறிக்கையில், நீங்கள் எடுக்காத கடன்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான புதிய விண்ணப்பங்கள் இருந்தால், உங்கள் பான் எண் திருடப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
உங்கள் பான் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்று கண்டுபிடிக்க இங்கே இரண்டு வழிகள் உள்ளன:
முதல் வழி – UPI ஆப் மூலம் செக் செய்யலாம்
உங்கள் போனில் நீங்கள் பயன்படுத்தும் GPay (கூகுள் பே) அல்லது CRED போன்ற UPI அல்லது பேமெண்ட் ஆப்ஸ்கள் மூலம் எளிதாகச் சரிபார்க்கலாம்.
* உங்கள் UPI செயலியைத் திறக்கவும்.
* ‘கிரெடிட் ஸ்கோர்’ அல்லது ‘CIBIL ஸ்கோர்’ செக் செய்யும் ஆப்ஷனைத் தேடவும்.
* அந்த ஆப்ஷனை கிளிக் செய்து, தேவையான அனுமதிகளைச் (Access) செயலியில் கொடுக்கவும்.
* செயலி உங்கள் ஸ்கோரை காட்டும். அதில், ‘முழு அறிக்கை / Full Report’ ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த விரிவான அறிக்கையில், உங்களுக்குத் தெரியாத கடன்கள், கிரெடிட் கார்டு விண்ணப்பங்கள் அல்லது திடீரென எடுக்கப்பட்ட கடன்களுக்கான விண்ணப்பங்கள் (Inquiries) ஏதேனும் உள்ளதா என்று கவனமாகப் பார்க்கவும். அப்படி ஏதேனும் இருந்தால், உங்கள் பான் எண் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இரண்டாவது வழி: கிரெடிட் பீரோ (Credit Bureau) இணையதளம்
முறையான கிரெடிட் தகவல் அளிக்கும் தளங்களான CIBIL, Experian போன்ற கிரெடிட் பீரோக்களின் இணையதளத்திற்குச் சென்று நேரடியாகவும் செக் செய்யலாம்.
* நீங்கள் விரும்பும் கிரெடிட் பீரோவின் இணையதளத்திற்குச் செல்லவும் (உதாரணமாக: CIBIL).
* உங்களுக்கு ஏற்கனவே கணக்கு இருந்தால் லாகின் செய்யவும், இல்லையென்றால் புதிய கணக்கைத் தொடங்கவும் (Sign-up).
* உங்களுக்குத் தேவையான நிதி மற்றும் தனிப்பட்ட தகவல்களை உள்ளிடவும்.
* உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும்.
* இப்போது உங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் விரிவான அறிக்கை திரையில் தெரியும்.
அறிக்கையில், உங்களுக்கு சம்பந்தமில்லாத கடன்கள், கிரெடிட் கார்டுகள் அல்லது சந்தேகத்திற்கிடமான புதிய விண்ணப்பங்கள் ஏதேனும் உள்ளதா என இரண்டு முறை செக் செய்யவும். இந்த இரண்டு முறைகளையும் பின்பற்றி, உங்கள் பான் எண்ணை நீங்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.
About the Author
S.Karthikeyan