“சினிமா புகழ் மூலம் மாய பிம்பம்…” – விஜய் மீது அதிமுக துணை பொதுச் செயலர் கே.பி.முனுசாமி தாக்கு

கிருஷ்ணகிரி: “மக்களை சந்திக்காமல் சினிமா புகழை வைத்துக் கொண்டு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல மாய பிம்பம் ஏற்படுத்தி கொண்டுள்ளனர்” என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக சாடினார், அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ.

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டிணம் அடுத்துள்ள தளிஅள்ளி கிராமத்தில் நடந்த அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ பேசியது: “2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதுவரையில் நடந்த அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவுக்கும் திமுகவுக்கும் இடையேதான் நேரடி போட்டிகள் இருந்து வந்தது.

ஆனால், எதிர்வரும் தேர்தல் சற்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிமுக – திமுக இரு கட்சிகளில் செல்வாக்கு மிக்க தலைவர்களான கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு தலைவர்களும் மறைந்து விட்டனர். இந்தச் சூழ்நிலையில் தான் நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம்.

இவ்வாறான நிலையில், தமிழகத்தில் புதிய, புதிய கட்சிகளும் உருவாகி மாய பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளனர். அவர்கள், வெளியே சென்று மக்களை சந்திப்பதில்லை, மக்களோடு நேரடியாக தொடர்பு வைத்துக் கொள்வதில்லை, ஏதோ சினிமாவில் நடித்தார்கள் அந்தப் புகழை வைத்துக்கொண்டு ஒரு பெரிய கட்டமைப்பை உருவாக்கியதை போல தன்னை முதன்மைப்படுத்திக் கொண்டு, அவர்களும் தேர்தல் களத்தில் வந்து நிற்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையில்தான் நாம் தேர்தலை சந்திக்க இருக்கிறோம். இந்த தேர்தலில் நாம் விழிப்போடு இருக்க வேண்டும்” என்றார் கே.பி.முனுசாமி. தவெக தலைவர் விஜய், சட்டப்பேரவை தேர்தலில் தவெகவுக்கும், திமுகவுக்கும் தான் நேரடி போட்டி என பேசி வரும் நிலையில், அவரை மறைமுகமாக தாக்கி, அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.