மதுரை: திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு திட்டத்தை நிறைவேற்றக் கோரிய மனுவுக்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ராஜேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிறப்பு தரிசன டிக்கெட் பெற 5 முதல் 7 மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியதுள்ளது. பக்தர்கள் வரிசையில் காத்திருக்கும் இடத்தில் மேற்கூரை, குடிநீர், அமர்வதற்கு இருக்கை போன்ற வசதிகள் செய்யப்படாததால் முதியோர், மாற்றுத் திறனாளிகள், பெண்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் பக்தர்களுக்கு டோக்கன் வழங்கி குறிப்பிட்ட நேரத்தில் தரிசனத்துக்கு அனுமதிப்பது, நேர முறையில் தரிசனம் செய்ய ஆன்லைனில் கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்துவது, முதியோர், மாற்றுத் திறனாளிகளுக்கு என சிறப்பு கவுன்ட்டர்கள் திறப்பது, தரிசனத்துக்காக தனி பாதையை ஏற்படுத்துவது, பக்தர்கள் கூட்டத்தை முறைப்படுத்த அதிக பணியாளர்களை நியமனம் செய்தல், பக்தர்கள் வரிசை செல்லும் இடத்தில் குடிநீர், மேற்கூரை, கழிவறை, மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தக்கோரி கோயில் அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆனால், மனு மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, திருச்செந்தூர் கோயிலில் தரிசன முன்பதிவு மற்றும் தரிசன வரிசையை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வு விசாரித்து, மனு தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை ஆணையர், திருச்செந்தூர் கோயில் அறங்காவலர் குழு தலைவர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்தது.