“தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் சொல்வாரா?” – ஹெச்.ராஜா

சிவகங்கை: “தேர்தல் ஆணைய விதிமுறைகளைக் கடைப்பிடிக்க மாட்டேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்வாரா?” என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பினார்.

‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றி 150 ஆண்டு நிறைவு பெறுவதையொட்டி, பாஜக சார்பில் சிவகங்கை வேலுநாச்சியார் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியாவில் தயாராகும் சுதேசிப் பொருட்களை வாங்குவதாக உறுதிமொழி ஏற்கப்பட்டது. பாஜக மாவட்டத் தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார். மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மாவட்டத் தலைவர் மேப்பல் சக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறியது: “பிஹாரில் தேசிய ஜனநாயக் கூட்டணி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. இண்டியா கூட்டணிக்கு பொய், பித்தலாட்டம்தான் மூலதனம். தமிழகத்தை தலை நிமிர விடமாட்டோம் என்ற வகையில் ஸ்டாலின் செயல்படுகிறார். தேர்தல் ஆணையம் போல அமலாக்கத் துறை தன்னாட்சி அமைப்பாகும். அதற்கும், பாஜகவுக்கும் சம்பந்தமில்லை.

ஊழல் செய்தவர்கள் மீது தான் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்கிறது. விஜய் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் கூட்டணியை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். கட்சியைப் பதிவு செய்தபோதே தேர்தல் ஆணைய விதிமுறைக்கு கட்டுப்படுவோம் என்று உறுதி அளித்துள்ளனர். அதை மீறினால் கட்சி அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தேர்தல் ஆணைய விதியை கடைப்பிடிக்க மாட்டேன் என்று சொல்லும் தைரியம் முதல்வருக்கு இருக்கிறதா?

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட்டபோது, போலி வாக்காளர்கள் இருப்பதாக நீதிமன்றம் சென்றவர் ஸ்டாலின். அதை நீக்க வேண்டாமா? ஆ.ராசா ஊழலுக்கு சிறப்பு பட்டம் பெற்றவர். ‘5ஜி’ வந்தாலும் அவரது ‘2ஜி’ மறக்காது” என்றார் ஹெச்.ராஜா.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.