“பிஹார் தேர்தலில் பிரசாந்த் கிஷோரால் எந்த தாக்கமும் இருக்காது” – தேஜஸ்வி யாதவ்

பாட்னா: பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த கிஷோர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த மாட்டார் என்று மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவையின் முதல்கட்டத் தேர்தல் நடந்து முடிந்து இரண்டாம் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு தேஜஸ்வி யாதவ், பேட்டி அளித்திருந்தார். இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இந்த கேள்வி, எந்தக் கட்சி எங்களுக்கு செதத்தை விளைவிக்கும் அல்லது உதவும் என்பது பற்றியது.

கடந்த தேர்தலில் சிராக் பாஸ்வான் எங்களுக்கு உதவியதாக சிலர் கூறுவார்கள். இந்த தேர்தலில், பிரசாந்த் கிஷோர் எங்கள் வாக்குகளைத் திருடிவிடுவார் என்று சிலர் ஊகிப்பார்கள். ஆனால், இந்த விளையாட்டில் நாங்கள் ஈடுபட விரும்பவில்லை. நாங்கள் அரசாங்கத்தை அமைக்கப் போகிறோம். பிஹார் மாற்றத்தைக் காணும் என்பதில் மட்டும் எனக்கு நம்பிக்கை உள்ளது” என தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.

முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரசாந்த் கிஷோரின் ஜன சுராஜ் கட்சி, பிஹாரின் 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. படித்த இளைஞர்கள் இடையே இக்கட்சி தனித்த செல்வாக்கைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

பெண்களின் வாக்குகளைக் குறிவைத்து தேசிய ஜனநாயகக் கூட்டணியும் மகா கூட்டணியும் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ள நிலையில், பெண்களின் வாக்குகள் இந்த தேர்தலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தேஜஸ்வி யாதவ், “இன்று ஏராளமான இளைஞர்கள் பிஹாரை விட்டு வெளி மாநிலங்களுக்குச் சென்று வேலை செய்கிறார்கள். ஹோலி, சாத் போன்ற பண்டிகைகளின்போது மட்டுமே அவர்கள் பிஹாருக்குத் திரும்பி தங்கள் குடும்பத்துடன் இருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திலும் இருக்கும் அம்மாக்களும் தங்கள் மகன், தங்களை விட்டு பிரிந்து இருப்பதை விரும்பவில்லை. எப்போதும் தங்களுடனேயே தங்கள் மகன் இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

பிஹாரில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டிய அவசியத்தை நிதிஷ் குமார் மற்றும் நரேந்திர மோடி தலைமையிலான மாநில – மத்திய அரசுகள் தவறிவிட்டன. நிதிஷ் குமார் 20 ஆண்டுகளாக முதல்வராக இருக்கிறார். பிஹாரில் இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க நிதிஷ் குமார் அரசாங்கம் ஏதேனும் திட்டத்தை வெளியிட்டதா?

பிஹார் முன்னேறி வளர்ந்த மாநிலமாக மாற விரும்புகிறது. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்கட்டத் தேர்தலின்போதே மாற்றத்துக்காக அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள். சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து உள்ளூரில் வேலைகள் மற்றும் தொழில்கள் அதிகரிக்க அவர்கள் வாக்களித்திருக்கிறார்கள்.

இடப்பெயர்வு, குற்றம், ஊழல் இல்லாத பிஹாரை மக்கள் விரும்புகிறார்கள். தகவல் தொழில்நுட்ப மையமாகவும் ஜவுளி மையமாகவும் பிஹார் மாற வேண்டும். பிஹார் மக்கள் தொகையில் 70% விவசாயத்தை நம்பியிருப்பதால் உணவு பதப்படுத்துதல் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை மக்கள் விரும்புகிறார்கள்” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.