மும்பை: பேருந்து மோதி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க மோட்டார் விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
மகாராஷ்டிரா, தானே நகரில் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் 26-ம் தேதி ஒரு பேருந்து நிறுத்தத்தில் ஐ.டி. ஊழியர் தினேஷ் யஷ்வந்த் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்து நின்ற ஒரு பேருந்து வேகமாக புறப்பட்டு பின்னர் திடீரென பின்னோக்கி வந்துள்ளது. அப்போது தினேஷ் மீது மோதியதில் உயிரிழந்தார்.
தினேஷின் மனைவி, இது தொடர்பாக மோட்டார் விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் (எம்ஏசிடி) முறையீடு செய்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், விபத்துக்கு பேருந்து ஓட்டுநரின் அலட்சியமே காரணம் என தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்தப் பேருந்துக்கு காப்பீடு செய்துள்ள நிறுவனமும் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்ட தீர்ப்பாயம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.30.11 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்தத் தொகைக்கு 9% வட்டி வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.