சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.
கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பன்முகத் திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டுச் செல்லும் தீராத கலைதாகமும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டு, என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்புநிறை பிறந்தநாள் வாழ்த்துகள்’ என்று தெரிவித்திருந்தார்.
இதேபோல் பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், திரையுலகினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சென்னை போட்கிளப் பகுதியில் உள்ள கமல்ஹாசனின் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் நேற்று மாலை சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு நன்றி தெரிவித்த கமல் அவர்களை வரவேற்று அவர்களுக்கு விருந்தளித்து உபசரித்தார்.