‘வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி பெருமையுடன் ஏந்திக்கொண்டது – மல்லிகார்ஜுன கார்கே

புதுடெல்லி,

வங்காள கவிஞர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடல் முதன்முதலில் 1875-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி ‘பங்கதர்ஷன்’ என்ற இலக்கிய இதழில் வெளியிடப்பட்டது. ‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில், ஓராண்டுக்கு(2026 நவம்பர் 7-ந்தேதி வரை) நடைபெறக் கூடிய தேசிய பாடல் கொண்டாட்டங்களை டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

மேலும் இது தொடர்பான நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தையும் அவர் வெளியிட்டார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“இன்று இந்தியாவின் தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த பாடல் நமது தேசத்தின் கூட்டு ஆன்மாவை விழிப்படையச் செய்து, சுதந்திரத்திற்கான முழக்கமாக மாறியது. பங்கிம் சந்திர சாட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’, நமது தாய்நாடான பாரத மாதாவின் உணர்வை உள்ளடக்கி, இந்திய மக்கள், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை கொண்டாடுகிறது.

இந்திய தேசிய காங்கிரஸ் ‘வந்தே மாதரம்’ பாடலை பெருமையுடன் ஏந்திக்கொண்டது. 1896-ம் ஆண்டு கொல்கத்தாவில் அப்போதைய காங்கிரஸ் தலைவர் ரஹ்மத்துல்லா சயானி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, ​​ரவீந்திரநாத் தாகூரால் முதன்முதலில் ‘வந்தே மாதரம்’ பொதுவெளியில் பாடப்பட்டது. அந்த தருணம் சுதந்திரப் போராட்டத்திற்கு புத்துயிர் அளித்தது.

மதம், சாதி மற்றும் பிராந்திய அடையாளங்களை வைத்து இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்காக ஆங்கிலேய அரசால் ‘பிரித்தாளும் கொள்கை’ வடிவமைக்கப்பட்டது என்பதை காங்கிரஸ் புரிந்துகொண்டது. அந்த கொள்கைக்கு எதிராக, ‘வந்தே மாதரம்’ பாடல் பாரத மாதாவின் மீதான பக்தியால், அனைத்து இந்தியர்களையும் ஒன்றிணைக்கும் வலிமையான பாடலாக எழுச்சி பெற்றது.

1905-ம் ஆண்டு வங்கப் பிரிவினையில் இருந்து, நமது துணிச்சலான புரட்சியாளர்களின் இறுதி மூச்சு வரை, ‘வந்தே மாதரம்’ நாடு முழுவதும் எதிரொலித்தது. ‘வந்தே மாதரம்’ என்பது லாலா லஜபதி ராய் உருவாக்கிய உருதுமொழி நாளிதழின் தலைப்பாக மாறியது, ஜெர்மனியில் உயர்த்தப்பட்ட பிகாஜி காமாவின் கொடியில் பொறிக்கப்பட்டது, பண்டிதர் ராம் பிரசாத் பிஸ்மிலின் கிராந்தி கீதாஞ்சலியில் இடம்பெற்றது. அதன் பிரபலத்தால் பீதியடைந்த ஆங்கிலேயர்கள் அதை தடை செய்தனர். ஏனெனில் ‘வந்தே மாதரம்’ இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தின் இதயத் துடிப்பாக மாறியது.

வங்கப் பிரிவினை நாட்களில் வங்காளத்தின் இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் ‘வந்தே மாதரம்’ மிகவும் சக்திவாய்ந்த போர் முழக்கமாக மாறியது என்று 1905-ல் மகாத்மா காந்தி எழுதினார். அது ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கம். நான் சிறுவனாக இருந்தபோது, ‘ஆனந்த மடம்’ நாவலைப் பற்றியோ, அதன் ஆசிரியரான பங்கிம் பற்றியோ எதுவும் தெரியாதபோது கூட, ‘வந்தே மாதரம்’ பாடல் ​​என்னை ஆட்கொண்டது. என்னால் தூய்மையான தேசிய உணர்வை உணர முடிந்தது.

1938-ம் ஆண்டில், பண்டிதர் நேரு, ‘30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்தப் பாடல் இந்திய தேசியவாதத்துடன் நேரடியாக தொடர்பில் உள்ளது. இதுபோன்ற மக்களின் பாடல்களை தன்னிச்சையாக மக்களின் மனதில் திணிக்க முடியாது. அவை தாங்களாகவே உச்சத்தை அடைகின்றன’ என்று எழுதினார்.

அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு, 1937-ம் ஆண்டில், உத்தரபிரதேச சட்டமன்றம், சபாநாயகர் புருஷோத்தம் தாஸ் டாண்டன் தலைமையில் ‘வந்தே மாதரம்’ பாடத் தொடங்கியது. அதே ஆண்டில், பண்டிதர் நேரு, மவுலானா ஆசாத், சுபாஷ் சந்திர போஸ், ரவீந்திரநாத் தாகூர் மற்றும் ஆச்சார்ய நரேந்திர தேவ் ஆகியோரின் தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், வந்தே மாதரத்தை தேசியப் பாடலாக முறையாக அங்கீகரித்தது. இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் அடையாளமாக ‘வந்தே மாதரம்’ பாடலை காங்கிரஸ் கட்சி மீண்டும் உறுதிப்படுத்தியது.

இருப்பினும், இன்று தேசியவாதத்தின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. தங்கள் கூட்டங்கள் அல்லது அலுவலகங்களில் ‘வந்தே மாதரம்’ அல்லது நமது தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை ஒருபோதும் பாடியதில்லை என்பது மிகவும் முரண்பாடாக உள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் தொடர்ந்து ‘நமஸ்தே சதா வத்சலே’ என்ற பாடலைப் பாடி வருகின்றனர். அந்த பாடல் அவர்களது அமைப்பை புகழக்கூடியது, தேசத்தை அல்ல.

1925-ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிறுவப்பட்ட காலத்தில் இருந்தே அவர்கள் ‘வந்தே மாதரம்’ பாடலை தவிர்த்து வருகின்றனர். அவர்களின் நூல்களிலோ அல்லது இலக்கியங்களிலோ ஒரு முறை கூட இந்தப் பாடல் குறிப்பிடப்படவில்லை.

தேசிய இயக்கத்தில் இந்தியர்களுக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்பினர் ஆங்கிலேயரை ஆதரித்தது, 52 ஆண்டுகளாக தேசியக் கொடியை உயர்த்தவில்லை. அவர்கள் இந்திய அரசியலமைப்பை துஷ்பிரயோகம் செய்ததில் இருந்து, அம்பேத்கரின் உருவ பொம்மைகளை எரித்தது, சர்தார் வல்லபாய் பட்டேல் கூறியதுபோல், மகாத்மா காந்தியின் படுகொலை வரை அனைத்திலும் ஈடுபட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை.

மறுபுறம், காங்கிரஸ் கட்சி ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘ஜன கண மன’ இரண்டிலும் மிகுந்த பெருமை கொள்கிறது. இந்தியாவின் ஒற்றுமை மற்றும் பெருமையை குறிக்கும் வகையில், ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திலும் நிகழ்விலும் இரண்டு பாடல்களும் பயபக்தியுடன் பாடப்படுகின்றன. 1896 முதல் இன்று வரை, ஒவ்வொரு காங்கிரஸ் கூட்டத்திலும், நாங்கள் பெருமையுடனும், தேசபக்தியுடனும் வந்தே மாதரத்தைப் பாடி வருகிறோம்.

காங்கிரஸ் கட்சி நமது தாய்நாட்டின் நித்திய பாடலான, நமது ஒற்றுமையின் அழைப்பான, இந்தியாவின் அழியாத உணர்வின் குரலான வந்தே மாதரத்தில் அதன் அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.”

இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.