நா திராங்,
வியட்நாமில் நூறாண்டு பழமையான வரலாற்று ஸ்தலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்த ஆண்டின் மிக கொடிய சூறாவளி புயல்களில் ஒன்றாக கல்மேகி பார்க்கப்படுகிறது. இதனால் கடலோர பகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
வியட்நாமின் மத்திய பகுதியை அது இன்று நெருங்கியுள்ளது. இந்த சூறாவளி புயலால் வியட்நாமில் கனமழை பெய்து, வெள்ளம் பெருக்கெடுத்து தெருவெங்கும் ஓடுகிறது. ஆறுகளிலும், அணைக்கட்டுகளிலும் கூட வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதில் சிக்கி 47 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கடல் அலைகள் 26 அடி உயரத்திற்கு (8 மீட்டர்கள்) எழும்பும் என்றும் அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த புயலாக இருக்கும் என தேசிய வானிலை மையம் இன்று தெரிவித்து உள்ளது. இன்றிரவு மத்திய வியட்நாம் பகுதியை அது தாக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அந்த பகுதியில் வீடு வீடாக சென்று மக்களை வெளியேறி செல்லும்படி அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் மத்திய பகுதியை கல்மேகி சூறாவளி புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் தாக்குதலின்போது, கார்களும், ஆற்றங்கரையோர வீடுகளும் மற்றும் பெரிய அளவிலான கப்பல் கன்டெய்னர்களும் கூட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. புயலை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 5 லட்சம் பிலிப்பைனைஸ் மக்கள் புலம் பெயர்ந்து சென்று விட்டனர்.
லிலோன் நகரில் 35 உடல்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. கார்கள் ஒன்றன் மீது ஒன்று என கிடந்தன. கட்டிடங்களின் மேற்பகுதிகள் இடிந்து விழுந்திருந்தன. இதனையடுத்து, பிலிப்பைன்ஸ் நாட்டின் ஜனாதிபதி பெர்டினண்ட் மார்கோஸ் தேசிய பேரிடராக இதனை அறிவித்து உள்ளார். இந்த சூறாவளி புயல், சிபு மற்றும் நீக்ரோஸ் ஆகிய தீவுகளை தாக்கி விட்டு கடலுக்கு திரும்பி விட்டது என தகவல் தெரிவிக்கின்றது. கடந்த சில நாட்களாக நீடித்து வந்த இந்த புயல் தாக்குதலுக்கு இதுவரை 140 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், புயல் வியட்நாமில் கரையை கடக்க தொடங்கியுள்ளது.