4-வது டி20: 7ம் வரிசையில் பேட்டிங் செய்ததால்… – ஆட்ட நாயகன் அக்சர் பேட்டி

கோல்டுகோஸ்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது போட்டி கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 46 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லீஸ், ஆடம் ஜம்பா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 168 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி 18.2 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. இதனால் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், அக்‌சர் படேல், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அக்‌சர் படேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் ஆட்ட நாயகன் அக்சர் படேல் அளித்த பேட்டியில், “7வது இடத்தில் பேட்டிங் செய்ததால் பிட்ச் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. எங்கள் பேட்ஸ்மேன்களுடன் பேசியபோது எதிர்பாராத பவுன்ஸ் இருக்கிறது, ஸ்லோவாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். எனவே எனது இடத்தை பிடித்து அடித்தேன்.

அணிக்கு எது தேவைப்படுகிறதோ அதுவே எனக்கு பிடித்த பேட்டிங் வரிசை. எங்கு விளையாடினாலும் அணிக்காக தாக்கத்தை ஏற்படுத்தினால் அதுவே எனது சிறந்த ஆட்டம் என்று நினைக்கிறேன். நான் 6 அல்லது 7-வது இடம் எனக்கு பிடித்த இடம் என்று நினைக்கவில்லை. நான் அங்கு சென்று என் அணிக்கு இப்போது என்ன தேவை என்று யோசித்து, அதைச் செய்வேன்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.