புதுடெல்லி: உத்தர பிரதேச எம்எல்ஏ ராஜா பைய்யா (எ) ரகுராஜ் பிரதாப் சிங். இவர், கடந்த மாதம் ஆயுத பூஜை தினத்தில், 200 வகையான துப்பாக்கிகளுக்கு தனது மாளிகையில் பூஜை செய்தார். இதில் உள்நாட்டு, வெளிநாட்டு துப்பாக்கிகள் இடம்பெற்றன. இதுதொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையானது.
உ.பி. குண்டா தொகுதியை சேர்ந்த ராஜா பைய்யா, தனது ஜனநாயக ஜன் சத்தா தளம் கட்சியின் சார்பில் எம்எல்ஏவாக உள்ளார். இவர் துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை போட்டது தொடர்பாக அவரது மனைவி பன்வி சிங்கும் சமூக ஊடகங்களில் புகார் தெரிவித்தார். இருவரும் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மேலும், துப்பாக்கிகளுக்கு பூஜை போட்டது தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்குரும் வலியுறுத்தினார்.
இதையடுத்து பிரதாப்கர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பிரிஜ்நந்தன் ராயின் உத்தரவின்படி, குண்டா தலைமை காவல் அதிகாரி அமர்நாத் குப்தா விசாரணை நடத்தினார். இந்நிலையில், விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் போலீஸார் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
துப்பாக்கிகளுக்கு ஆயுத பூஜை போடுவது அவர்களது குடும்ப பாரம்பரியம். அந்த நிகழ்ச்சியில் குற்றச்செயல்கள் எதுவும் நடைபெறவில்லை. ராஜா பைய்யா மீது எந்த தவறும் இல்லை. அவரது இல்லத்தில் உள்ள ஹனுமன் கோயில் வளாகத்தில் ஆயுத வழிபாடு கடந்த 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி மதம் மற்றும் பாரம்பரியமானது. இந்த பூஜை பாரம்பரியமாக பத்ரி ராஜ் மஹாலில் அவர்களின் மூதாதையர்களான மறைந்த ராய் பஜ்ரங் பகதூர் சிங் மற்றும் அவரது வாரிசு உதய் பிரதாப் சிங் ஆகியோரால் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அன்றைய தினம் எந்த சட்டவிரோத நடவடிக்கையும் நடந்ததற்கான ஆதாரம் இல்லை. இவ்வாறு போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.