சென்னை: எஸ்ஐஆர் திருத்தப் பணிகள் குறித்த பொதுமக்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கு தேர்தல் ஆணையத்தை வலியுறுத்த வேண்டுமென திமுக சட்டத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) தேர்தல் ஆணையம் அமல்படுத்தியுள்ளது.
இதை எதிர்த்து வரும் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து போராட்டம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு என பல்வேறு செயல்பாடுகளை முன்னெடுத்து வருகிறது. அதனுடன் எஸ்ஐஆர் திருத்தப் பணிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க திமுக தலைமை அலுவலகத்தில் சிறப்பு உதவி மையத்தை திமுக அமைத்துள்ளது.
ஒரே நாளில் 627 அழைப்புகள்: அந்த உதவி மையத்தின் தொடர்பு எண்ணுக்கு (08065420020) நேற்று முன்தினம் ஒருநாள் மட்டும் 627 அழைப்புகள் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதில், ‘2002-ம் ஆண்டில் வாக்களித்த இடத்தைவிட்டு வேறு இடத்துக்கு மாற்றி குடியேறினால், வாக்குரிமை தற்போது எந்த இடத்தில் அமையும், படிவத்தில் உறவினர் குறித்து தகவல் கட்டாயம் நிரப்ப வேண்டுமா? 2024-ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளது.
தற்போது பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்? வெளிநாட்டில் வேலையில் இருந்தால் அவருடைய படிவத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது? பிஎல்ஓ அலுவலர்கள் படிவத்தை பூர்த்தி செய்ய உதவுவதில்லை என்பன போன்ற பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த சந்தேகங்களை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தேர்தல் ஆணையத்தை திமுக சட்டத்துறை சார்பில் வலியுறுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.