ஐ.பி.எல்.: சாம்சனை வாங்க சிஎஸ்கே மீண்டும் பேச்சுவார்த்தை – தகவல்

சென்னை,

ஐ.பி.எல். தொடரின் 19-வது சீசன் அடுத்த வருடம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக வீரர்களுக்கான மினி ஏலம் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் இந்த தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் தங்களது அணியிலிருந்து விடுவிக்கப்போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதன்படி இன்னும் சில தினங்களில் 10 அணிகளும் தங்களது அணியில் இருந்து வெளியேற்றும் வீரர்கள் மற்றும் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை வெளியிடும் என்று தெரிகிறது. இதனிடையே டிரேடிங் முறையில் வீரர்கள் அணிமாற்றம் செய்யலாம் என்ற விதிமுறையும் இருப்பதினால் ஒரு சில நட்சத்திர வீரர்கள் டிரேடிங் முறையில் அணிமாற்றம் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற 18-வது ஐ.பி.எல். சீசன் முடிவடைந்த சில நாட்களிலே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் அந்த அணியிலிருந்து விலக முடிவெடுத்ததாக கூறப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த சீசனில் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திற்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் அடுத்த சீசனுக்கான (2026) மினி ஏலத்திற்கு முன்பு தன்னை டிரேடிங் முறையில் மாற்றவோ அல்லது அணியில் இருந்து விடுவிக்கவோ வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடம் சஞ்சு சாம்சன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைய உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டது. சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு டிரேடிங் முறையில் மாற்ற ராஜஸ்தான் விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி சஞ்சு சாம்சனுக்கு மாற்றாக சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர்களான ஜடேஜா மற்றும் துபே ஆகிய முன்னணி வீரர்களில் ஒருவரை ராஜஸ்தான் ராயல்ஸ் கேட்டதாக கூறப்பட்டது. ஆனால் ராஜஸ்தான் அணியின் கோரிக்கையை சென்னை அணி நிராகரித்ததாக தெரிகிறது. இதனால் அந்த பேச்சுவார்த்தை அத்தோடு முடிந்து விட்டதாக கருதப்பட்டது.

அந்த சூழலில் தற்போது சிஎஸ்கே நிர்வாகம் சஞ்சு சாம்சனை வாங்க மீண்டும் ராஜஸ்தானுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சஞ்சு சாம்சனுக்கு பதிலாக 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னணி நட்சத்திர வீரர் ஒருவரை ராஜஸ்தானுக்கு கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் சஞ்சு சாம்சனை வாங்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.