பெங்களூரு: கர்நாடகாவில் கரும்புக்கு வழங்கப்படும் ஆதரவு விலையை ரூ.3,500 ஆக உயர்த்தக்கோரி கடந்த 8 நாட்களாக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பெலகாவி மாவட்டத்தில் நேற்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீஸார் அவர்களை கலைந்து செல்லுமாறு கூறியதால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே விவசாயிகளில் சிலர் அங்கிருந்த போலீஸாரின் மீதும், வாகனங்களின் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
விவசாயிகள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களும், 10-க் கும் மேற்பட்ட போலீஸாரும் காயமடைந்தர். 3 அரசு பேருந்துகள், 4 லாரிகளின் கண்ணாடிகள் நொறுங்கின.
இதனிடையே கர்நாடக வேளாண் அமைச்சர் சிவானந்த் பாட்டீல் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அங்கு வந்தார். அப்போது விவசாயிகள் சிலர் தங்களின் காலணிகளை அவரது காரின் மீது வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.