கரூர்: கரூர் கூட்ட நெரிசல் கூட்ட உயிரிழப்பு தொடர்பாக தவெக பிரச்சார வாகன சிசிடிவி கேமரா பதிவு கேட்டு சிபிஐ சம்மன் வழங்கிய நிலையில், கரூர் சுற்றுலா மாளிகையில் சிபிஐயிடம் வீடியோ, ஆவணங்களை ஒப்படைக்க தவெக வழக்கறிஞர் மற்றும் நிர்வாகிகள் ஆஜராகினர்.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிஐ இதுதொடர்பாக 300க்கும் மேற்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பி அக்.30-ம் தேதி முதல் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் சாலையை 3 டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் 2 நாட்கள் அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனர். அன்றைய தினம் வேலுச்சாமிபுரத்தில் உள்ள கடைகள், அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகிய இடங்களுக்கு சென்று சிசிடிவி கேமரா உள்ள இடங்களில் அதன் பதிவுகளை கேட்டும், பிற இடங்களில் இச்சம்பவம் குறித்து விசாரணையும் நடத்தினர்.
நவ. 2-ம் தேதி கரூர் காமராஜபுரத்தில் ராம்குமார் என்பவரை தேடிச் சென்ற சிபிஐ குழுவினர் அன்றிரவு சென்னை சென்று சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் பிரச்சார வாகனத்தில் சிசிடிவி கேமரா பதிவுகள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்களையும், ராம்குமார் குறித்தும் கேட்டு விசாரணை நடத்தி சம்மன் அளித்தனர். இந்த விவரங்கள் 3 நாட்களில் அளிக்கப்படும் என தவெக நிர்வாகி நிர்மல்குமார் தெரிவித்திருந்தார்.
தவெக பிரச்சார கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர், வெளி மாவட்ட போலீஸாரிடம் நவ. 4, 5 ஆகிய இரு நாட்கள் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் கடந்த 3 நாட்களாக ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் என 20-க்கும் மேற்பட்டவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிலரிடம் தொடர்ந்து 3 நாட்களாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கரூர் சுற்றுலா மாளிகையில் இன்று (நவ.8-ம் தேதி) தவெக வழக்கறிஞர் அரசு உள்ளிட்ட நிர்வாகிகள் 3 பேர் பிரச்சார வாகனத்தின் சிசிடிவி கேமரா பதிவுகள் அடங்கிய வீடியோக்கள், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஒரு பையில் வைத்து எடுத்துச் சென்று சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.