“மூன்று முறை ஓபிஎஸ்ஸை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? பழனிசாமி கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் என்பது நாடறிந்த ஒன்று” என முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
கோபிசெட்டிபாளையத்தில் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக ஆட்சியை மீண்டும் உருவாக்கவே ஒருங்கிணைப்பு கருத்துகளை வெளியிட்டேன். அதனால், கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். இன்று, யார் என்னிடத்தில் பேசினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை உள்ளது. இது கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளது.
திமுக எம்எல்ஏ வீட்டு பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்ட பழனிசாமி, ஜெயலலிதா வாழ்ந்த கோடநாடு இல்லத்தின் கொலை – கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டாரா? ஓபிஎஸ்ஸை மூன்று முறை முதல்வராக்கிய ஜெயலலிதா, பழனிசாமியை ஏன் முதல்வராக்கவில்லை? நாங்களெல்லாம் முன்மொழியாமல், பழனிசாமி முதல்வராக ஆகி இருக்க முடியுமா? கொல்லைப்புற வழியாக முதல்வரானவர் பழனிசாமி என்பது நாடறிந்த ஒன்று.
தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்ட போது, ஆட்சியை தொடர தடுமாறிக் கொண்டிருந்தோம். அப்போது ஓபிஎஸ்ஸை அழைத்து, “நீங்கள் கட்சியில் ஒருங்கிணைப் பாளராகவும், துணை முதல்வராகவும் இருங்கள், நான் இணை ஒருங்கிணைப்பாளராக, முதல்வராக இருக்கிறேன்’’ என்று கூறி ஆட்சியை நடத்திவிட்டு, பின்னர் அவரையும் வெளியேற்றியவர் பழனிசாமி.
4 ஆண்டுகள், அதிமுக ஆட்சியை பாதுகாத்த பாஜக, 2024 தேர்தலில், மோடியை பிரதமராக்க முயற்சி செய்தபோது, அவர்களுக்கான ஆதரவை திரும்பப் பெற்று, “2031 தேர்தலிலும் பாஜக-வுடன் கூட்டு இல்லை” என்றார் பழனிசாமி. நாமக்கல் மாவட்ட பிரச்சாரத்தின்போது, “கொடி பறக்குது (தவெக), கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு” என்று பழனிசாமி சொன்னர். ஆனால், தவெக பொதுக்குழுவில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை அறிவீர்கள். ஒற்றுமையுடன் நாம் பலமாக இருந்தால் தான், பிறர் நம்மை நாடி வருவர். இந்த வரலாற்றை தான் எம்ஜிஆர், ஜெயலலிதா படைத்தனர். ஒருவர், தான் முன்னேற வேண்டும் என்றால் தனது கால்களால் நடந்து செல்ல வேண்டும்; பிறரது முதுகில் ஏறி சவாரி செய்யக்கூடாது.
சட்டப் பேரவை 42 நாட்கள் நடைபெற்றபோது, பழனிசாமிக்கு பின்னால் தான் அமர்ந்திருந்தேன். அதிமுக சரியாக இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தால் என்னை கூப்பிட்டு என்ன பிரச்சினை என்று கேட்டிருக்கலாம்; ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை. இன்று 14 பேரை நீக்கி உள்ளனர். இப்படியே நீக்கிக் கொண்டிருந்தால், முழு நிலவு தேய்ந்து அமாவாசை ஆகிவிடும்.பழனிசாமி கட்சியை நடத்தவில்லை; மகன், மாப்பிள்ளை, மருமகன், அக்கா மகன் ஆகியோர்தான் நடத்துகிறார்கள். இந்த இயக்கத்துக்காக தியாகம் செய்தவர்கள் இயக்கத்தை உயிராக நேசித்தவர்கள், இந்த இயக்கத்தைப் பற்றி தெரியாதவர்களிடம் மண்டியிட வேண்டிய நிலை உள்ளது.
பாஜகவினர் தான் என்னை அழைத்து அதிமுக ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்றார்கள். நானும் அதையே தான் சொன்னேன் “இயக்கம் ஒன்றிணைக்கப்பட வேண்டும். உங்களை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை, எங்களை விட்டால் உங்களுக்கும் வேறு வழி இல்லை” என்று சொன்னேன். வரும் தேர்தலில், அதிமுக-வை ஆட்சியில் அமர்த்தவும், 2029-ல் பாஜக-வின் தேவையை பூர்த்தி செய்யவும் வேண்டும் என்
றேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.