ராய்ப்பூர்,
சத்தீஷ்கார் மாநிலத்தில் நக்சல் பயங்கரவாதத்தை அழிக்க பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடையும் நக்சல்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கான அனைத்து உதவிகளும் அரசு சார்பில் செய்து கொடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து நக்சல் அமைப்பை சேர்ந்த பலர் பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், சத்தீஷ்காரில் உள்ள கரியாபந்த் பகுதியில் 7 நக்சல்கள், தங்களது ஆயுதங்களுடன் பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்தனர். இவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் 37 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பாதுகாப்பு படையினர் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவர்கள் 7 பேரும் சரணடைந்துள்ளனர். அவர்களின் மறுவாழ்க்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். இந்தியாவில் 2026-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள், நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.