இந்தியாவில் ஆதார் அட்டை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் ரெயில் டிக்கெட் புக்கிங் வரை பல சேவைகளுக்கு அதார் எண் கேட்கப்படுகிறது. 12 இலக்க எண் கொண்ட இந்த ஆதார் கார்டில் முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெற்று இருக்கின்றன. இதில் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற தகவல்களில் தவறுகள் ஏற்பட்டால், மக்கள் நேரில் ஆதார் மையங்களுக்கு சென்று திருத்தம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் நேர விரயம் மற்றும் தேவையற்ற தாமதங்கள் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன.
இந்த சிக்கலை தீர்க்க ஆதார் ஆணையம் புதிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, ஆதாரை டிஜிட்டல் மயமாக்கும் முயற்சியாக . “e-Aadhaar App” எனப்படும் இந்த புதிய செயலி அறிமுகமாகவுள்ளது. இந்த செயலி மூலம், ஆதார் தொடர்பான தகவல்களை மக்கள் தாங்களே வீட்டிலிருந்தபடியே திருத்த முடியும். குறிப்பாக பிறந்த தேதி, பெயர், பெயர்களில் எழுத்துப்பிழை, முகவரி, மொபைல் எண் போன்ற முக்கிய விவரங்களை இனி ஆதார் மையத்திற்கு செல்லாமல் மொபைல் மூலமாகவே புதுப்பிக்க முடியும்.
புதிய e-Aadhaar செயலியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முகஅடையாளம் மற்றும் கைரேகைவழியாக பயனாளரின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும். இதனால் தரவு பாதுகாப்பு மேலும் வலுப்பெறும், போலி ஆதார் மோசடிகளைத் தடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த வசதி அறிமுகம் ஆகும் எனத்தெரிகிறது. பயோ மெட்ரிக் அப்டேட் தவிர ஏனைய அப்டேட்களை செல்போன் செயலி வழியாகவே பண்ண முடியும் என்று கூறப்படுகிறது.