தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் முதல் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய நான்கு மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதல் தொடர்ந்து செய்யப்படும் என தமிழக உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் கேழ்வரகு கொள்முதல் திட்டம், கடந்த 2022-2023 கொள்முதல் பருவத்தில் முதற்கட்டமாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு, 514 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டது. இரண்டாம் கட்டமாக 2023-2024 கொள்முதல் பருவத்தில் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களையும் சேர்த்து, 4 மாவட்டங்களில் மொத்தம் 1,889 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த 2024-2025 கொள்முதல் பருவத்தில், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட விவசாயிகளிடமிருந்து 4050 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டது.

கடந்த மூன்றாண்டுகளில் 6453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்யப்பட்டு 3578 விவசாயிகளுக்கு ரூ. 26.48 கோடி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதத்திலிருந்து, விவசாயிகளிடமிருந்து கேழ்வரகு மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ.48860 என்ற ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படும். நடப்பு 2025-2026-கொள்முதல் பருவத்தில் 01.11.2025 முதல் 31.01.2026 வரை தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்கள் திறந்து விவசாயிகளிடமிருந்து 6000 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் செய்ய தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு தமிழ்நாடு அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் கொள்முதல் விலையான மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ. 42900 என்பதை விட இந்த ஆண்டு மெட்ரிக் டன் ஒன்றிற்கு ரூ. 5960 கூடுதலாகும். ஆதலால் இந்த நல் வாய்ப்பினைப் பயன்படுத்தி, தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட கேழ்வரகு விவசாயப் பெருங்குடி மக்கள், தாங்கள் விளைவித்த கேழ்வரகினைத் தங்கள் மாவட்டங்களில் திறக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி கேழ்வரகு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்து பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.