பீகார் தேர்தல்: `சாலையில் கிடந்த VVPAT ஆவணம்' – தேர்தல் ஆணையம் கொடுத்த விளக்கம் என்ன?

பீகார் சட்டமன்றத் தேர்தலில் முதற்கட்டமாக 243 சட்டமன்றத் தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) மூலம் 47 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட பிறகு நடைபெறும் இத்தேர்தல், தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், பீகாரின் சமஸ்திபூர் மாவட்ட சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியின் கல்லூரி அருகே, சாலையோரத்தில் VVPAT பேப்பர்கள் கண்டெடுக்கப்பட்டது.

Gyanesh Kumar
Gyanesh Kumar – தலைமை தேர்தல் ஆணையர்

VVPAT என்பது வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் (EVM) இணைக்கப்பட்ட கருவியாகும். வாக்காளரின் வாக்கு, அவர் வாக்களித்த சின்னத்தில் பதிவாகிறதா என்பதை பார்த்து அறிந்துகொள்ளும் வகையில் செயல்படுத்தப்பட்டது.

அப்படியான வாக்கு VVPAT சாலையில் கிடந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் (CEC) ஞானேஷ் குமார், “வாக்குப் பதிவு செயல்முறையில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை.

இந்த சீட்டுகள் உண்மையான வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பு நடத்தப்பட்ட மாதிரி வாக்குப்பதிவுகள். இந்தத் தவறுக்கு காரணமான உதவி தேர்தல் அதிகாரி (ARO) இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும், சம்ஸ்திபூர் மாவட்ட நீதிபதி சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.” என்றார்.

சராய்ரஞ்சன் சட்டமன்றத் தொகுதியை 2010 முதல் முதல்வர் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியின் விஜய் குமார் சவுத்ரி தக்கவைத்துக் கொண்டு வருகிறார்.

அவர் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் அர்பிந்த் குமார் சஹானி மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் சஜன் குமார் மிஸ்ரா உள்ளிட்டோருக்கு எதிராக இந்தத் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

இரண்டாம் வாக்குப்பதிவு நவம்பர் 11-ம் தேதி நடைபெறும். வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதி நடைபெறும்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.