புதுச்சேரி: இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது என்று புதுச்சேரி அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தெரு நாய்கள் விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த புதுச்சேரி அரசு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். கடந்த கால திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தரமற்ற மருந்து கொள்முதல் செய்தது மற்றும் மதுபான உற்பத்தியில் லஞ்சம் பெற்றது தொடர்பாக முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்திலிங்கம் எம்பி இருவரும் மாறி மாறி புகார் கூறி வருகின்றனர். ஆதலால் துணைநிலை ஆளுநர் விசாரணை கமிஷன் அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அரசு சார்பில் உதவிகள் பெறாத சிவப்பு நிற ரேஷன் கார்டு வைத்துள்ள குடும்ப தலைவிக்கு மாதம் உதவித் தொகையாக ரூ.2,500 மற்றும் மஞ்சள் கார்டு வைத்துள்ள குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1,000 நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதேபோன்று முதியோர், விதவை, கணவரால் கைவிடப்பட்டவர்கள் ஆகியோர் பெறும் உதவித் தொகையில் ரூ.500 உயர்த்தி தரப்படும் என அறிவித்திருந்தார். தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் அறிவித்த திட்டத்தை செயல்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். இந்த ஒரு திட்டத்தை மட்டும் செயல்படுத்த அரசுக்கு மாதம் சுமார் ரூ.30 கோடியும், ஆண்டுக்கு சுமார் ரூ.360 கோடியும் நிதி தேவை.
தற்போது பட்ஜெட் திருத்திய மதிப்பீடு செய்யும் பணி நடந்து வருகிறது. எந்தத் துறையில் ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படவில்லையோ அதை இத்திட்டத்தை நிறைவேற்ற இப்போதே நடவடிக்கை எடுத்து டிசம்பர் மாதம் முதல் நிறைவேற்ற வேண்டும். புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் அங்குள்ள கடைகள் இன்னமும் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருக்கிறது.
நீதிமன்ற உத்தரவைக் காரணம் காட்டி புதிய ஏலத்தின் அடிப்படையில்தான் கடைகள் ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. ஆனால் புதுச்சேரி அண்ணா திடலில் புதிய கடைகள் கட்டப்பட்டு ஏற்கெனவே கடைகள் வைத்திருந்தோருக்குப் புதிய கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. புதிய பேருந்து நிலையத்தில் வேண்டுமென்றால் பாதிக் கடைகளை ஏற்கெனவே கடை வைத்திருந்தவர்களுக்கும் மீதியை ஏலத்தின் வாயிலாகவும் அதை ஒப்படைக்கலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த சுமார் 29 மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு இன்றுவரை அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் அவர்கள் இன்று வரை விடுதலை செய்யப்படவில்லை. இலங்கை நீதிமன்றம் அவர்களது நீதிமன்ற காவலை மீண்டும் நீட்டித்துள்ளது. இதற்கு மேலும் காரைக்கால் மாவட்ட மீனவர்களுடைய விடுதலை விஷயத்தில் ஆளும் புதுச்சேரி அரசு பாராமுகமாக இல்லாமல் ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவை புதுச்சேரி தேர்தல் துறை சீர்குலைத்து வருகிறது. வீடு தோறும் சென்று வாக்குப் பதிவு அதிகாரிகள் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், அந்த அதிகாரிகள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்களுக்கும் படிவத்தை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டுச் செல்கின்றனர். அவர்கள் அங்கிருந்து காலி செய்து சென்றவர்களிடம் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களைப் பெற்று அந்தப் படிவத்தைப் பூர்த்தி செய்து தேர்தல் துறையில் திரும்ப ஒப்படைக்கும் நிகழ்வும் நடக்க வாய்ப்பு உள்ளது. இதையெல்லாம் ஆதாரத்துடன் புகாராக எழுதி புதுச்சேரி தேர்தல் துறையிடம் அதிமுக சார்பில் ஒப்படைக்க உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.