சென்னை: திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேம்பால வழக்கில் பெங்களூருவில் இருந்து நேராக நீதிபதி அசோக்குமார் வீட்டுக்கே காலை 11 மணிக்கு சென்று சரண்டர் ஆனார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். பின்னர் சிறைக்குச் சென்று, விடுதலையும் ஆனார்.
அந்த வழக்கு என்ன ஆனது? 2011 முதல் 2021 வரை அதிமுகவினர் என்ன செய்தார்கள்? சிறை என்றவுடன் ஓடிப்போனவர் இல்லை ஸ்டாலின். சிறை என்றதும் ஓடோடி வந்தவர் அவர். கரூரில் உங்கள் உறவு 41 பேர் இறந்தார்கள் என்கிறீர்கள், அதை 91 ஆகாமல் பார்த்துக் கொண்டவர் முதல்வர் ஸ்டாலின்.
இரண்டு கோடி உறுப்பினர் கொண்ட இயக்கம் எனக்கூறும் தவெகவில் ஒருவரைக்கூட மருத்துவமனையில் காணவில்லை. ஓடிப்போன நீங்கள், எங்களை ஓடியவர்கள் என்று கூறுவது வடிகட்டிய பொய். காசு இருக்கிறது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசும் போக்கை ஆதவ் அர்ஜுனா மாற்றிக்கொள்ள வேண்டும்.
பட்டியல், வன்னியர் சமூகங்களைச் சேரவிடாமல் திமுக சதி செய்வதாக அன்புமணி கூறுகிறார். பட்டியல் இனத்தை மட்டுமல்ல, பாமக நிறுவனர் ராமதாசையும் சேர்த்து அன்புமணியிடம் இருந்து காப்பாற்றி வருவது திமுகதான். அன்புமணிக்கு கேபினட் அந்தஸ்தில் சுகாதார அமைச்சர் பதவி வாங்கித் தந்தது திமுக என்பதை மறக்கக் கூடாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.