மகாத்மா காந்தி அன்று எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது: பிரியங்கா காந்தி

கட்டிஹார் (பிஹார்): ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இனறு காங்கிரஸ் எதிர்கொள்கிறது என பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார்.

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கட்டிஹார் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, “பிரதமர் மோடி தனது பதவிக்கான கண்ணியத்தைப் பேணவில்லை. ஒருபக்கம் அவர், அகிம்சைக்கான வந்தே மாதரம் பாடலை புகழ்ந்து பேசுகிறார். மறுபக்கம், நாட்டு துப்பாக்கி பற்றிப் பேசுகிறார்.

ஒரு காலத்தில் மகாத்மா காந்தி எதிர்கொண்ட அதே போரை இன்று காங்கிரஸ் எதிர்கொள்கிறது. தற்போது நாங்கள் உங்கள் உரிமைகளுக்காக, உண்மைக்காக, ஒரு பேரரசுக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அதுதான் நரேந்திர மோடி பேரரசு. மக்களை அடக்குவதன் மூலம் அவர் நாட்டை வழிநடத்துகிறார். அவரது கட்சி வதந்திகளைப் பரப்புகிறது.

மகாத்மா காந்தி போராடிய உரிமைகளில் ஒன்று வாக்குரிமை. அரசியலமைப்பைப் பலவீனப்படுத்த பாஜக அனைத்தையும் செய்கிறது. அவர்கள் வாக்குரிமையைத் திருடத் தொடங்கிவிட்டார்கள். இந்த வாக்குத்திருட்டில் அவர்களுக்கு மூன்று பேர் துணை நிற்கிறார்கள்.

ஞானேஷ் குமார், விவேக் ஜோஷி, எஸ்.எஸ்.சந்து ஆகிய தேர்தல் ஆணையத்தின் மூன்று மூத்த அதிகாரிகள் வெட்கமற்ற முறையில் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் அரசியலமைப்புக் கடமைகளை நிறைவேற்றவில்லை. பிஹாரில் 65 லட்சம் வாக்காளர்களின் வாக்குகளை அவர்கள் நீக்கிவிட்டார்கள். அவர்கள் தங்கள் பதவிகளுக்கப் பின்னால் ஒளிந்துகொள்ள அனுமதிக்க வேண்டுமா? ஓய்வுக்குப் பிறகு அவர்கள் சொகுசான வாழ்க்கை வாழ்வது நல்லதா? மக்கள் அவர்களை மறக்க வேண்டுமா?

அரசியலமைப்பையும் நாட்டையும் காட்டிக் கொடுத்தவர்களை மக்கள் மறக்க வேண்டுமா அல்லது நினைவில் கொள்ள வேண்டுமா? பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் பெயருடன் சேர்ந்து இந்த மூன்று பெயர்களையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.