Vande Bharat: வந்தே பாரத் ரயிலில் RSS பாடல்; 'தேச பக்தி' – புகழும் ரயில்வே – வலுக்கும் கண்டனம்!

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியிலிருந்து நான்கு புதிய வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

காசி-கஜுராஹோ வந்தே பாரத், ஃபிரோஸ்பூர்-டெல்லி வந்தே பாரத், லக்னோ-சஹரன்பூர் வந்தே பாரத், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் ஆகிய நான்கு வந்தே பாரத் ரயில்கள் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், எர்ணாகுளம்-பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் பயணத்தின் போது, ​​பள்ளி மாணவர்கள் குழு ஒன்று ரயிலில் பயணிக்க வைக்கப்பட்டது.

Vande Bharat
Vande Bharat

அந்தப் பள்ளி மாணவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் பாடல் ஒன்றைப் பாடும் வீடியோவை தெற்கு ரயில்வேயின் சமூக ஊடகப் பக்கங்களில் வெளியிடப்பட்டது.

மேலும்,“எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் மகிழ்ச்சியின் மெல்லிசை! பள்ளி மாணவர்கள் ரயில் பெட்டிகளை தேசபக்தி பாடல்களால் நிரப்பினர். அந்த தருணத்தின் உணர்வைக் கொண்டாடினர்” எனவும் அந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் விமர்சனங்களைச் சந்தித்த நிலையில், ரயில்வே நிர்வாகத்தால் அந்த வீடியோ நீக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்ற வெளியிட்டிருக்கிறார்.

அதில், “ஆர்.எஸ்.எஸ் கூட்டங்களில் வழக்கமாகப் பாடப்படும் பிரபலமான மலையாளப் பாடலை மாணவர்கள் குழு ஒன்று பாடும் வீடியோவை, தெற்கு ரயில்வே தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடகக் கணக்குகளில் ‘தேசபக்தி பாடல்’ என்று குறிப்பிட்டு வெளியிட்டிருக்கிறது.

தெற்கு ரயில்வேயின் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. வெறுப்பு, பிரிவினை அரசியலை அடிக்கடி வெளிப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ். பாடலை, அரசின் அதிகாரப்பூர்வ விழாவில் கொண்டுவருவது அரசியலமைப்பு கொள்கைகளை மீறுவதாகும்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை கூட சங் பரிவார் தனது வகுப்புவாத அரசியலைப் பரப்புவதற்குப் பயன்படுத்துகிறது என்பது, ஏற்றுக்கொள்ள முடியாதது.

சுதந்திரப் போராட்டத்தின் போது இந்தியாவின் மதச்சார்பற்ற தேசியவாதத்தின் மூலக்கல்லாகச் செயல்பட்ட ரயில்வே, இன்று ஆர்.எஸ்.எஸ்.ஸின் வகுப்புவாத நிகழ்ச்சி நிரலை ஆதரிக்கிறது” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

அதைத் தொடர்ந்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் எம்.பி கே.சி. வேணுகோபால், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அதில், “அரசின் அதிகாரப்பூர்வமான அரசு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தொடர்பான ஒரு பாடலைச் சேர்த்தது, ஆர்.எஸ்.எஸ் கூட்டக் காட்சியாகக் குறைத்துவிட்டது.

ஒரு தேசிய நிகழ்வில் மதவெறி அடையாளங்களை புகுத்துவதற்கான இந்த வெட்கக்கேடான முயற்சி, இந்தியாவின் பொது நிறுவனங்களை ஒரு அமைப்பின் பிம்பமாக மீண்டும் எழுதும் மாபெரும் முயற்சியின் ஒரு பகுதி.

இது ஒரு சாதாரணத் தவறு அல்ல. நம் தேசிய கீதம் உட்பட நமது தேசிய சின்னங்களை இழிவுபடுத்த, வேண்டுமென்றே செய்யப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சி” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

K.C. Venugopal
K.C. Venugopal

இந்த விவகாரம் பெரும் விவாதமானதைத் தொடர்ந்து இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பின் (DYFI) கேரளப் பிரிவு, “பொது நிகழ்வுகளில் ஆர்.எஸ்.எஸ் பாடல்களை நிகழ்த்துவது மத்திய அரசின் பொது நிறுவனங்களை காவிமயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதி.

ஆர்.எஸ்.எஸை குற்றமற்ற ஒரு அமைப்பாக முன்னிறுத்த மேற்கொள்ளப்படும் இதுபோன்ற முயற்சிகள் எதிர்க்கப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

அதே நேரம், இந்த விவகாரம் குறித்து இதுவரை தெற்கு ரயில்வே எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.