புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் பற்றிய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காப்பதும், சீனாவுடனான பிரச்சினைகளைத் தீர்க்க மத்திய அரசு தவறியதும், எஸ்ஐஆர் உள்ளிட்டவை வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக முக்கிய கவலைகளாக உள்ளன என்று காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 19 வரை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த ஜெய்ராம் ரமேஷ், “எஸ்ஐஆர் ஒரு முக்கிய பிரச்சினையாக இருக்கும். ஆபரேஷன் சிந்தூர் போது இந்தியா-பாகிஸ்தான் மோதலை நிறுத்தியதாக தொடர்ந்து கூறிவரும் ட்ரம்பின் கருத்து குறித்து பிரதமர் மவுனம் காப்பது ஒரு முக்கிய பிரச்சினை. சீனாவுடனான தற்போதைய உறவு குறித்து ஒரு தெளிவில்லை. சீனாவுடன் எல்லை ஒப்பந்தம் எதுவும் இல்லை, நாம் முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. சீனா நிறுவியுள்ள புதிய இயல்புநிலையின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன, இதுவும் முக்கிய பிரச்சினையாக இருக்கும்.
பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி விகிதம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, வேலையின்மை போன்ற பல பிரச்சினைகள் உள்ளன. நாங்கள் மீண்டும் மீண்டும் கோரிக்கைகளை வைத்து வருகிறோம், ஆனால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.
இந்த குளிர்கால கூட்டத்தொடர் இவ்வளவு தாமதமாக கூட்டப்பட்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் 20 முதல் கூட்டப்பட்டு டிசம்பர் 24 வரை மூன்று அல்லது நான்கு வாரங்கள் வரை நீடிக்கும். இந்த முறை கூட்டத்தொடர் டிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 15 நாட்கள் மட்டுமே நீடிக்கும் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அரசாங்கம் எதற்காக இவ்வளவு வேகமாக ஓடுகிறது என்று எனக்குப் புரியவில்லை. அவர்கள் இந்த கூட்டத்தொடரை ஒரு சம்பிரதாயமாக விரைவில் முடிக்க விரும்புகிறார்கள். தேர்தலுக்கு முன்பு கூட்டத்தொடர்கள் குறைக்கப்படுகின்றன, இது மக்களவைத் தேர்தல்கள் வருவதைக் குறிக்கிறதா?” என்று அவர் கேட்டார்.