சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, ஆஸ்திரேலியாவுக்கு தப்பியோடி தலைமறைவாகி உள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் சனூர் தொகுதியில் முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனவர் ஹர்மீத் சிங் பதன்மஜ்ரா. இவர் மீது ஜிர்காபூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை அளித்தார். அதில், ஹர்மீத் முன்பே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், பாலியல் ரீதியாகவும், ஆபாசமான பதிவுகளை அனுப்பியும் தொல்லை கொடுத்ததுடன் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தப் பெண் புகார் கூறியிருந்தார்.
இதையடுத்து ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது சிவில் லைன் போலீஸார் பாலியல் வன்கொடுமை, மோசடி, கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, ஹரியானா கர்னல் மாவட்டத்தில் உள்ள தப்ரி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ஆம் ஆத்மி எம்எல்ஏவை பிடிக்க தனி போலீஸ் படை சென்றது. அவரது ஆதரவாளர்கள் போலீஸாரை நோக்கி கற்களை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். அப்போது ஹர்மீத்போலீஸாரின் பிடியில்இருந்து தப்பி ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டார்.
இந்த வழக்கில் ஆஜராகாததையடுத்து பாட்டியாலா நீதிமன்றம் ஹர்மீதை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து நடவடிக்கை எடுத்தது. அவருக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி வெப் சேனலில் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மீத் சிங் பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் சதியின் காரணமாக ஜோடிக்கப்பட்டவை. பஞ்சாப் மக்களுக்காக பேசுவதை தடுக்கவே இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. பஞ்சாப் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களிடம் முக்கிய விவகாரங்களில் ஆலோசனை நடத்தப்படுவதில்லை.
பேச்சு சுதந்திரம் தடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆட்சியை இழந்தபிறகு அந்த தலைவர்கள் இப்போது பஞ்சாபை கைப்பற்றி அதே வழியில் நாசமாக்கி வருகின்றனர். எனக்கு நீதிமன்றத்தின் மேல் முழு நம்பிக்கை உள்ளது. என்னை போலி என்கவுன்ட்டர் செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். எனவே, ஜாமீன் கிடைத்தால்மட்டுமே இந்தியா திரும்புவேன். இவ்வாறு அவர் கூறினார்.