பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்ததற்கு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களே ‘எக்ஸ் காரணி’யாக உருவெடுத்துள்ளனர் என்று ஜன் சுராஜ் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பிரசாந்த் கிஷோர் அளித்த பேட்டியில், “இந்தத் தேர்தல்களின் எக்ஸ் காரணி பெண்கள் அல்ல, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். அவர்கள் நிதிஷ் – லாலுவை நம்பவில்லை. இப்போது மக்கள் சிந்திக்கிறார்கள். இம்முறை மாற்றி வாக்களித்து பார்ப்போம், ஒருவேளை நம் வாழ்க்கை மேம்படும் என நம்புகிறார்கள். இந்த இரண்டு காரணிகளும் மிகப் பெரிய பங்கைக் கொண்டிருந்தன.
30-35 ஆண்டுகளாக இங்கு நடந்து வரும் அரசியல் காரணமாக பிஹாரில் வாக்குப்பதிவு சதவீதம் ஒருபோதும் அதிகரிக்கவில்லை. முதல் முறையாக, ஜன் சுராஜ் கட்சி வந்ததன் விளைவாக இங்கே வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏனெனில் இப்போது பெரும்பாலான இடங்களில் முக்கோணப் போராட்டம் நிலவுகிறது. முன்பு, இரண்டு பேர் மட்டுமே இருந்தனர். எனவே, அவர்களின் ஆதரவாளர்களாக இருந்தவர்கள் மட்டும் வாக்களித்தனர். அப்படி இல்லாதவர்கள் வாக்களிக்கவில்லை.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்காளர்களாக சிறைப்படுத்தப்பட்டு இருந்தனர். அதனால்தான், தேசிய ஜனநாயகக் கூட்டணியினர், 8 மாதங்களுக்கு முன்பிருந்தே நாடு முழுவதும் சுற்றித் திரிந்து பெரும் முயற்சி எடுத்தனர். அவர்கள், ‘நீங்கள் அனைவரும், இங்கே திரும்பி வாருங்கள்’ என்று கூறினர். அவர்கள் 12,000 ரயில்களைத் தொடங்கி வைத்தனர், மேலும் 20% தள்ளுபடி வழங்குவது குறித்தும் பேசப்பட்டது. ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மாற்றத்தைத் தேடுகிறார்கள் என்பதை தேசிய ஜனநாயகக் கூட்டணியினர் உணர்ந்தனர்.
முன்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணி மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது. எனவே, அவர்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணி வாக்காளர்களாக இருந்தனர். இன்றைய சூழலில், ஜன் சுராஜ் மாற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது” என்றார்
பிஹார் தேர்தலில் கூட்டணி அரசாங்கத்தில் சேருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “பிஹார் மக்கள் இப்போதும் மாற விரும்பவில்லை என்றால், நாங்கள் அவர்களுடன் தங்கி இன்னும் ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றுவோம். அரசாங்கத்தில் சேருவது என்ற கேள்விக்கே இடமில்லை. ஜன் சுராஜ் தனது சொந்த பலத்தில் அரசாங்கத்தை அமைக்கும், அல்லது நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம். தேவைப்பட்டால், மீண்டும் ஒரு தேர்தலை நடத்துவோம். நாங்கள் பாஜகவை எதிர்க்கிறோம், சித்தாந்த அடிப்படையில் அவர்களை எதிர்க்கிறோம்”என்று பிரசாந்த் கிஷோர் கூறினார்.