“அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்” – டெல்லி கார் வெடிப்பு சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: டெல்லி செங்கோட்டை அருகே ஏற்பட்ட கார் வெடிப்பு சம்பவத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “டெல்லி செங்கோட்டை அருகே நடந்த வெடிப்பு சம்பவத்தில் பல அப்பாவிகள் பலியானதை அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை உடைக்கின்றன. துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயங்களுடன் போராடுபவர்கள் வலிமை பெறவும், விரைவில் குணமடையவும் விழைகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி செங்கோட்டை அருகே அமைந்துள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் சாலையில் கார் ஒன்று திடீரென வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச் சம்பவத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், பிஹார், மத்தியப் பிரதேசம்,ஹரியானா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் நிலை பலப்படுத்தப்பட்டுள்ளது. மும்பை, ஹைதராபாத், சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போலீஸார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல தமிழகத்தின் சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ரயில் நிலையங்களிலும் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.