புதுடெல்லி: டெல்லியில் செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதிக்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்தது. இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் மிகவும் வேதனை அளிப்பதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
“இந்த துயரமான நேரத்தில் நாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் ஆதரவாக இருக்கிறோம். காயமடைந்தவர்கள் விரைந்து குணம்பெற வேண்டுகிறோம். இந்தச் சம்பவம் குறித்து அரசு ஆழமாகவும், விரைந்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என காங்கிரஸ் கட்சியின் செய்திப் பிரிவு தலைவர் பவன் கெரா தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அடுத்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், பல்வேறு மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டெல்லி – செங்கோட்டையை ஒட்டியுள்ள பகுதி முழுவதும் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.