சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வட தமிழகத்தின் உள்பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (நவ.11) முதல் நவ.13-ம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், நவ.14 முதல் நவ.16-ம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் நாளை (நவ.11-ம்) திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நவ.12-ம் தேதி திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களிலும், நவ.13ம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (நவ.11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் 4 செ.மீ மழை, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, அடையாமடை, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை, கன்னியாகுமரி மவாட்டம் சிற்றாறு, திற்பரப்பு, நெய்யூர், தேனி மாவட்டம் பெரியகுளம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.