பாட்னா: பிஹார் இரண்டாம் கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அதிகரித்தது குறித்து மகிழ்ச்சி வெளியிட்ட ஆர்ஜேடி தலைவரும், மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ், பிஹாரில் அற்புதங்கள் நிகழ்வதாக நம்பிக்கை தெரிவித்தார்.
பிஹார் சட்டப்பேரவைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட வீடியோ பதிவில், “என் இதயம் மகிழ்ச்சியால் நிரம்பியுள்ளது. என் பிஹார் உண்மையிலேயே அற்புதங்களை நிகழ்த்துகிறது. எல்லா இடங்களிலிருந்தும் அமோக வாக்குப்பதிவு பற்றிய தகவல்கள் வருகின்றன. முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள், வணிகர்கள், விவசாயிகள், ஒவ்வொரு சாதி, ஒவ்வொரு வகுப்பினரும் இந்த மகத்தான ஜனநாயகத் திருவிழாவில் தங்கள் பங்கேற்பை உற்சாகமாக உறுதி செய்கிறார்கள்.
உங்கள் விரலில் உள்ள நீல மை, உங்கள் எதிர்காலத்தை பொன்னாக்க உதவும். நீங்கள் அழுத்தும் பொத்தான் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு உங்கள் அதிகாரம், பாதுகாப்பு, செழிப்பு, அமைதி மற்றும் எதிர்காலத்தை தீர்மானிக்கும். ஜெய் ஹிந்த், ஜெய் பிஹார்,” என்று குறிப்பிட்டுள்ளார். பிஹார் இரண்டாம் கட்ட தேர்தலில் மாலை 5 மணி நிலவரப்படி மொத்த வாக்குப்பதிவு 67.14% ஆக இருந்தது. கிஷன்கஞ்சில் அதிகபட்சமாக 76.26% வாக்குகளும், நவாடாவில் குறைந்தபட்சமாக 57.11% வாக்குகளும் பதிவாகின.