புதுடெல்லி,
டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.
இந்த வெடிச்சம்பவம் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்தது போல இருந்துள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். 13 பேர் உயிரிழந்துள்ளனர். தொடக்கத்தில் இந்த சம்பவம் சாதாரணமானதாக தெரிவிக்கப்பட்டது. காரில் கியாஸ் சிலிண்டர் அல்லது பேட்டரி வெடித்து இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் பாதிப்புகளை பார்க்கையில் அது திட்டமிட்ட நாசவேலை என தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது. காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களும் இங்குதான் பணியாற்றி வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனை செய்யப்படுகிறது. வெடித்த கார், வெள்ளை நிறத்திலானது. அது பரிதாபாத் செக்டார் 37-ல் உள்ள ‘ராயல் கார் ஷோன்’ என்ற நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டு உள்ளது. அந்த நிறுவனத்தின் உரிமையாளர் செல்போனை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிட்டார்.
சம்பவம் தொடர்பாக காரின் முதல் உரிமையாளர் முகமது சல்மான், அரியானாவில் கைது செய்யப்பட்டார். இது அரியானாவில் பதிவு செய்யப்பட்ட கார் ஆகும். 2014-ம் ஆண்டு இந்த கார் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதன்பிறகு டெல்லியில் ஒருவருக்கு இந்த காரை சல்மான் விற்றுள்ளார். இதன்பிறகு 2 கைகள் மாறி ஜம்மு காஷ்மீர் புல்வாமாவைச் சேர்ந்த அமீர் என்பவருக்கு விற்றுள்ளார். அவர் உமர் முகமதுவுக்கு கொடுத்துள்ளார். இப்படி பல கைகள் மாறிய காரை, திட்டமிட்டே இந்த கொடுஞ்செயலுக்கு உமர் முகமது பயன்படுத்தியிருப்பார் என கூறப்படுகிறது. இவர்களில் சல்மானிடம் இருந்து காரை வாங்கிய நபரும் போலீசில் பிடிபட்டு உள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் கார் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் மேலும் இரண்டு கார்களை தேடும் பணி பணியில் டெல்லி காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகள் தீவிரம் காட்டி வருகிறது. அரியானா மாநில பதிவெண் கொண்ட காரை ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மருத்துவருக்கு விற்றவர் கைதானார். கைதானவர் அளித்த வாக்குமூலத்தின்படி ஒரு கார் மட்டுமின்றி மேலும் இரண்டு கார்களை வாங்கியது அம்பலமாகியுள்ளது.