புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் எல்லைப் பகுதிகளை ஒட்டிய வானம் பார்த்த வறண்ட பூமி- ஆவுடையார் தாலுகா – ஏம்பல் வட்டாரம். இந்தப் பகுதி மக்களின் நிலையான வேலைவாய்ப்புக்கு குறிப்பாக பெண்களின் வாழ்க்கை மேம்படும் வகையில் ஒரு தொழிற்சாலை அமைத்துத் தர வேண்டும் என்று பல்வேறு மேம்பாட்டுப் பணிகளுக்குத் துணை நிற்கும் ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் பல வருடங்களுக்கு முன்னர் அரசிடம் கோரிக்கை வைத்தது.

இதற்காக ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம் தனது கோரிக்கை மனுக்களை சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்வரை மக்கள் பிரதிநிதிகளிடமும், மாண்புமிகு அமைச்சர்களிடமும் இடைவிடாது அனுப்பிக் கொண்டே இருந்தது. இதுதொடர்பாக எந்தெந்தத் திசைகளிலில் இருந்தெல்லாம் ஆதரவு கிடைக்குமோ அங்கெல்லாம் தனது உதவிக்கரங்களை ஏந்தியபடியே இருக்கிறது ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமம்.

அதன் தற்போதைய அடுத்தகட்ட நகர்வாக சிப்கா’ட் மூலம் ‘மினி டெக்ஸ்டைல்ஸ் பார்க்’ அமைவதற்கான நிலம் அடையாளம் காணப்பட்டு, ஆய்வுப் பணிகள் முடிந்து சாத்தியக்கூறு அறிக்கையும் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன்

ஏம்பல் வட்டாரத்தில், நிரந்தர வேலைவாய்ப்பின்றி இருப்பதால், இங்குள்ள பெண்கள் பிழைப்புக்காக  புதுக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, திருப்பூர், கோவை, சென்னை போன்ற  நகரங்களை நோக்கிப் பயணப்படும் சோகம் தொடர்ந்து கோண்டிருக்கிறது.

“இந்தப் பகுதிப் பெண்களுக்குக் கௌரவமான வாழ்வு கிடைக்க ஒரு தொழிற்சாலை வேண்டும்!” என்ற ஒற்றை லட்சியத்துடன், ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் கோரிக்கைப் போர் 2024-லிருந்து இன்றுவரை இடைவிடாது  தொடர்கிறது.

ஏம்பல் வட்டார வளர்ச்சிக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரின்பநாதன் நம்மிடம் பேசுகையில், “2024-ல் தொடங்கிய எங்களுடைய போராட்டம், ஓயாத மனுக்களாலும், மக்கள் பிரதிநிதிகளிடம் இடைவிடாமல் வைத்த கோரிக்கைகளாலும்தான் இப்போது இந்த நிலையை எட்டியுள்ளது. சென்னை கோட்டை முதல் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் வரை நாங்கள் ஓடிய ஓட்டத்திற்குப் பலன் கிடைத்துள்ளது.

சிப்காட் நிலத்தை அடையாளம் கண்டு, சாத்தியக்கூறு அறிக்கையையும் (Feasibility Report) சமர்ப்பித்துள்ளது. இது அதிகாரப்பூர்வ ஒப்புதலுக்கான முதல் வெற்றி. இதில் சுமார் 3.5 ஹெக்டேர் அரசு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது உறுதி,” என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தற்போது திட்டத்திற்கான அஸ்திவாரம் போடப்பட்டுவிட்ட நிலையில், இப்போது ஏம்பல் வட்டார மக்களின் ஒட்டுமொத்தப் பார்வையும் அரசின் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பில்தான் உள்ளது. இந்தத் திட்டம் மூலம் சுமார் ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்பதால், அவர்களின் எதிர்பார்ப்பு பெரும் கனவுகளுடன் காத்திருக்கிறது.

ஏம்பல் வட்டாரத்தைச் சேர்ந்த, பிழைப்புக்காகப் பக்கத்து நகரத்துக்குச் சென்றுவரும் பெண்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.

வறண்ட பூமியில் வசிக்கும் அங்குள்ள பெண்களின் வாழ்வில் விரைவில் நிச்சயம் பச்சையம் துளிர்விடும் என்ற நம்பிக்கையுடன், தமிழ்நாடு அரசின் விரைவான அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள் ஏம்பல் வட்டார மக்கள்..!.

-பழ.அசோக்குமார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.