புதுச்சேரி: ஜிப்மரில் ரத்த பரிசோதனை நேரம் நோயாளிகளின் வசதிக்காக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜிப்மருக்கு சிகிச்சைக்காக புதுச்சேரி மட்டுமில்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர். ஜிப்மரில் புறநோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு பொது மருத்துவப் பிரிவில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் மற்றும் ஜிப்மர் ரத்த வங்கியில் செயல்பட்டு வரும் ரத்த பரிசோதனை மையம் ஆகியவற்றின் செயல்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன.
திங்கள் முதல் வெள்ளி வரையிலான வார நாட்களில் காலை 06:30 மணி முதல் மாலை 05:00 மணி வரையிலும் சனிக்கிழமைகளில் காலை 06:30 மணி முதல் மதியம் 02:00 மணி வரையிலும் இம்மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜிப்மர் நிர்வாகத்தரப்பில் கூறியதாவது: ஜிப்மரில் ரத்த பரிசோதனை காலநேர நீட்டிப்பு அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனைகள் இனி செய்ய முடியும். காத்திருப்பு நேரத்தை வெகுவாக குறைக்கவும், துரித நேரத்தில் பரிசோதனை முடிவுகளை பெறவும், அதை தொடர்ந்து மருத்துவ ஆலோசனைகளை உடனடியாக பெறுவதற்கும் இம்முயற்சி வழிவகுக்கும்.
மருத்துவமனையில் நோயாளிகளுக்கான சீரான மருத்துவ சேவையை உறுதி செய்வதோடு, நோய் கண்டறிதல் சேவைகளை மேம்படுத்துவதையும், அதன் மூலம் நோயாளிகளின் நோய் சிகிச்சைக் குறித்த திருப்திகரமான மனநிலையை உறுதி செய்வதற்கும் ஏதுவாகும்.
காலை 06:30 மணிக்கு ரத்த பரிசோதனைகள் செய்வதன் மூலம் வெறும் வயிற்றில் (உணவு உண்ணாமல்) ரத்த பரிசோதனை தேவைப்படும் நோயாளிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும். குறிப்பாக மூத்த குடிமக்கள், பெண்கள் மற்றும் நீண்ட நேரம் உணவு அருந்த இயலாமல் இருக்கும் நோயாளிகளுக்கும் இது பெரும் பயனை அளிக்கும்’ என்று ஜிப்மர் தரப்பு தெரிவித்துள்ளது.