புதுடெல்லி: அல் பலா பல்கலைக்கழக நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கி, ரூ.7.5 கோடி மோசடி வழக்கில் கடந்த 2001-ல் கைது செய்யப்பட்டவர் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி நிகழ்ந்த கார் குண்டுவெடிப்பை நிகழ்த்திய உமர் முகமது நபி, அல் பலா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்தவர் என்பதும், இதே மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்களாக பணியாற்றிய மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதும் புலன் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, இந்த பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்து பாதுகாப்பு அமைப்புகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளன.
மத்திய அரசின், தேசிய மதிப்பீடு மற்றம் அங்கீகார கவுன்சிலின் அங்காரம் இருப்பதாக தவறான தகவலை தனது வலைதளத்தில் இந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது தற்போது தெரிய வந்ததை அடுத்து, அது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி பல்கலைக்கழகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பல்கலைக்கழகத்தின் நதி விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை தனி விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான ஜாவெத் அகமது சித்திக்கியின் பின்னணி பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் மோவில் பிறந்த இவர், ஃபரிதாபாத்தில் 78 ஏக்கர் பரப்பளவில் அல் பலா பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறார். இந்த வளாகத்தில் பொறியியல், மருத்துவம் உட்பட பல்வேறு உயர் கல்வி படிப்புகளை வழங்கும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும், அல் பலா இன்வெஸ்ட்மென்ட், அல் பலா மெடிக்கல் ரிசர்ச் பவுண்டேஷன், அல் பலா டெவலெப்பர்ஸ் பி. லிட்., அல் பலா இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் பவுண்டேஷன், அல் பலா கல்வி சேவை நிறுவனம், அல் பலா சாஃப்ட்வேர் நிறுவனம், அல் பலா எனர்ஜீஸ் நிறுவனம், தார்பியா கல்வி அமைப்பு உள்ளிட்ட 9 நிறுவனங்களை நடத்தி வருகிறார். அல் பலா கட்டிடங்கள் அனைத்தும் அல் பலா சாரிட்டபிள் ட்ரஸ்ட்-ன் கீழ் கட்டப்பட்டுள்ளன.
டெல்லி நியூ ஃபிரண்ட்ஸ் காலனி காவல் நிலையத்தில் ஜாவெத் அகமது சித்திக்கி மீது பதிவு செய்யப்பட்ட பழைய குற்றவியல் வழக்கு தற்போது மீண்டும் வெளியாகி உள்ளது. அல் பலா குழும நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்ய மக்களை ஊக்குவிக்கும் போலி முதலீட்டுத் திட்டங்களை வேறு சிலருடன் சேர்ந்து சித்திக்கி உருவாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டின் பேரில் சித்திக்கி கடந்த 2001-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க 2003, மார்ச்சில் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 2004 பிப்ரவரி வரை அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்றும், ரூ.7.5 கோடியை முதலீட்டாளர்களுக்கு திருப்பி கொடுத்ததை அடுத்தே ஜாமீன் கிடைத்தது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.