சென்னை: திமுக அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும் என்று ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் நிர்வாகிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளை நேரடியாக (ஒன் டு ஒன்) சந்திக்கும் ‘உடன்பிறப்பே வா’ என்ற சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் இதுவரை 81 தொகுதிகளின் நிர்வாகிகளை ஸ்டாலின் நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தொடர்ந்து 38-வது நாளாக நேற்று நடந்த நிகழ்வில் போடிநாயக்கனூர், சாத்தூர் தொகுதிகளின் நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, ‘மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களில் தகுதியானவர்கள் இருந்தால், அவர்களைக் கண்டறிந்து உரிமைத் தொகை பெற்றுத்தர திமுகவினர் உதவ வேண்டும். போடி தொகுதியை இந்த முறைதிமுக கூட்டணி வெல்ல வேண்டும்.
சாத்தூர் தொகுதியில் மாற்றம் நிகழ்ந்தாலும் கலங்காமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். திமுக அரசின் சாதனைகளை தொகுதி முழுவதும் விளம்பரப்படுத்த வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்களை நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் வழங்கியதாகக் கூறப்படுகிறது. ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பில் முதல்வருடன், தலைமைக்கழக நிர்வாகிகள், மண்டலப் பொறுப்பாளர்கள், மாவட்டச்செயலாளர்கள் பங்கேற்பது வழக்கம். சமீபத்திய சந்திப்புகளில் இளைஞர் அணி முக்கிய நிர்வாகிகள், துணை முதல்வர் உதயநிதி ஆதரவு பெற்றவர்களும் கலந்துகொள்கின்றனர் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.