மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உத்தரவிடக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை ஏழுமலையைச் சேர்ந்த ராம ரவிக்குமார், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு திருப்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலை வழக்கில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவில் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் அல்லாமல், பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது சட்டவிரோதம், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவில் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றவும், உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கும் நோக்கத்தில் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் தீபம் ஏற்றும் திட்டம் முடிவு செய்யப்படவில்லை எனக் கூறப்பட்டது. அப்போது நீதிபதி, யாரை கண்டு பயப்படுகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். பின்னர் மனு தொடர்பாக அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவ.19-க்கு தள்ளிவைத்தார்.