பாட்னா: ரகோபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்ட பிஹார் முதல்வர் வேட்பாளரும் ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் வெற்றி பெற்றுள்ளார்.
லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தின் கோட்டை என கருதப்படும் தொகுதி ரகோபூர். லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி ஆகியோர் இந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தேஜஸ்வி யாதவும் 2015 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மிகவும் பாதுகாப்பான தொகுதி என்பதால், அதே தொகுதியில் தேஜஸ்வி யாதவ் மீண்டும் களமிறங்கினார்.
எனினும், இம்முறை வெற்றி அவருக்கு எளிதாக இருக்கவில்லை. ஆரம்ப சுற்றுகளில் முன்னிலை வகித்து வந்த தேஜஸ்வி யாதவ், பின்னர் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கினார். 14 சுற்றுக்கள் முடிவில் தேஜஸ்வி யாதவை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சத்திஷ் குமார், சுமார் 7,500 வாக்குகள் கூடுதலாகப் பெற்று முன்னிலை வகித்து வந்தார். இதனால், ராஷ்ட்ரிய ஜனதா தள நிர்வாகிகளும் தொண்டர்களும் மிகவும் சோகத்திற்குள்ளாகினர்.
எனினும், அடுத்தடுத்த சுற்றுக்களில் கூடுதல் வாக்குகளைப் பெறத் தொடங்கிய தேஜஸ்வி யாதவ், 32 சுற்றுக்களின் முடிவில் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 597 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 14,532 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் சத்திஷ் குமாரை தோற்கடித்தார். இதனை அடுத்து ஆர்ஜேடி தொண்டர்கள் உற்சாகமடைந்தனர்.