சென்னை: “காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி அதிகாரம் மட்டுமே இலக்கு இல்லை, இது மக்களுக்கான இயக்கம்” என பிஹார் தேர்தல் முடிவுகள் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் என்டிஏ கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதேசமயம், ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், இது குறித்து செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசும்போது, “காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவே கிடையாது. காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டது ஆட்சி அதிகாரத்தை சுவைக்க அல்ல; ஆட்சி அதிகாரம் மட்டுமே காங்கிரஸ் கட்சியின் இலக்கும் இல்லை இது மக்களுக்கான இயக்கம்.
வெற்றி, தோல்வியைப் பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. இதை தோல்வியென்று சொல்ல முடியாது. வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று சொல்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம். நாங்கள் வென்றால் துள்ளிக் குதிப்பதும் இல்லை, தோல்வி அடைந்தால் கவுந்தடித்து படுப்பதும் இல்லை.
எஸ்ஐஆர் பற்றி நாங்கள் முன்பிருந்தே பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். 17 லட்சம் வாக்குகள் பிஹாரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. இது குறித்து இனிமேல் ஆய்வு செய்ய வேண்டும். ஜனநாயகம் வீழ்த்து விடக்கூடாது. ஜனநாயகம் வீழ்வதற்கு யாரும் அனுமதிக்க கூடாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.