சிவகங்கை: நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே கிருங்கோட்டையில் முன்னாள் எம்எல்ஏ தென்னரசின் புதுப்பிக்கப்பட்ட வெண்கல சிலையை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசும்போது, “2026 தேர்தலில் சிவகங்கை, ராமநாதபுர ஆகிய 2 மாவட்டங்களிலும் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். அடிமை கட்சி அதிமுக, பாசிச பாஜகவை வீழ்த்தி 2-வது முறையாக மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்பார்” எனறார்.
தொடர்ந்து சிங்கம்புணரியில் பேரூராட்சி அலுவலகம், சீரணி அரங்கை திறந்து வைத்தார். பின்னர் பேருந்து நிலையம் அருகே அண்ணா மன்றம் மற்றும் கருணாநிதி சிலையை திறந்து வைத்து உதயநிதி பேசியது: “ஒரு கட்சிக்கு நல்ல தலைமை, ஆழமான அடிப்படை கொள்கை, வலுவான கட்டமைப்பு ஆகிய 3 விஷயங்கள் இருந்தால் மட்டுமே மக்களால் ஏற்கப்பட்டு, வளர்ச்சியை அடைய முடியும். மூன்றும் உள்ள திமுக 75 ஆண்டுகள் கடந்தும், வலுவான கொள்கையுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது.
அண்ணா முதல்வராக இருந்தபோது, சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு பெயர், சுயமரியாதை திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தான். இந்திக்கு இடமில்லை என மூன்று திட்டங்களை கொண்டு வந்தார். இந்த மூன்றையும் எந்த கொம்பன் வந்தாலும் மாற்ற முடியாது.
சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் மூலம் திமுக ஆதரவு வாக்குகளை நீக்க பார்க்கின்றனர். திமுகவுக்கு ஆதரவாக இருக்கும் சிறுபான்மையினர், பெண்கள், ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோரின் வாக்குகளை நீக்கிவிட்டால் ஜெயித்து விடலாம் என பாஜக திட்டமிட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் கடைமட்ட திமுக வாக்காளர் இருக்கும் வரை ஒரு தகுதியான வாக்காளரையும் நீக்க முடியாது. சிறப்பு தீவிர திருத்தத்தை திமுக ஆதரிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, அதை அதிமுக ஆதரிக்கிறது.
மு.க.ஸ்டாலினை இந்தியாவின் நம்பர் 1 முதல்வர் என்றும், அதிமுகவை பாஜகவின் நம்பர் 1 அடிமை என்றும் நாட்டு முழுவதும் கேலி பேசுகின்றனர். பார்க்கும் கால்களை எல்லாம் கீழே விழுந்து வணங்கும் பழனிசாமி, இப்போது புது கால்களை தேடி, தேடி விழுந்து கொண்டு இருக்கிறார். இப்படிப்பட்ட அடிமைகளை தமிழக அரசியலிருந்து விரட்ட வேண்டும். அதுதான் தமிழக எதிர்காலத்திற்கு நாம் செய்யக்கூடிய கடமை.
நாட்டிலேயே பாசிச பாஜகவுக்கு பதற்றத்தை கொடுக்கக் கூடிய கட்சியாக திமுக திகழ்கிறது. அவர்களை விரட்ட அடுத்த 4 மாதங்களுக்கு கடுமையாக உழைத்து, 200-க்கும் மேற்பட்ட தொகுதிகள கைப்பற்ற வேண்டும்” என்று உதயநிதி பேசினார்.